
காக்கும் கடவுளாக திகழக் கூடியவர் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு பலவிதமான அவதாரங்களை எடுத்திருக்கிறார். அந்த அவதாரங்களில் ஒரு அவதாரமாக தான் கிருஷ்ணா அவதாரம் திகழ்கிறது. கிருஷ்ணர் அவதரித்த நாளை தான் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் கூறுகிறோம். ஆனால் இவை இரண்டிற்கும் சிறிது வேறுபாடு இருக்கிறது. அந்த வேறுபாட்டை பற்றியும் எந்த நாளில் கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதை பற்றியும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரம் மற்றும் தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் அஷ்டமி திதி வரக்கூடிய நாளில் நாம் கொண்டாடுவதை கோகுலாஷ்டமி என்றும் ரோகினி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நாம் கொண்டாடுவதை கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீ ஜெயந்தி என்றும் கூறும் பழக்கம் இருக்கிறது. பொதுவாகவே பலரும் அஷ்டமி திதி அன்று இரவு தான் கிருஷ்ணர் பிறந்தார் என்றும் அதனால் அஷ்டமி வரக்கூடிய நாளில் தான் வழிபாடு செய்ய வேண்டும். கிருஷ்ணரை வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தான் அஷ்டமி திதி இருக்கிறது என்பதால் அன்றைய தினத்தில் கோகுலாஷ்டமி நாம் கொண்டாடலாம். ரோகிணி நட்சத்திரம் 17ஆம் தேதி இருக்கிறது என்பதால் கிருஷ்ண ஜெயந்தியை அன்று கொண்டாடலாம்.
ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி ராகுகால எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கிருஷ்ணரை நாம் வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக காலை 7:45 மணியில் இருந்து 8:45 மணி, காலை 10:45 மணியிலிருந்து 11:45 மணி, மாலை 6:00 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். பொதுவாகவே கிருஷ்ணர் ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி வரக்கூடிய நாளில் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவர்கள் விரதம் இருந்து கிருஷ்ணரை வீட்டிற்கு அழைப்பார்கள். அப்படி அழைப்பதன் மூலம் அடுத்த கிருஷ்ண ஜெயந்திக்குள் அவர்களுடைய வீட்டில் குழந்தை தவளும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
அதனால் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் கிருஷ்ணரின் சிலை, சங்கு சாளக்கிராமம், பெருமாளின் சிலை இருக்கும் பட்சத்தில் அதற்கு நெய் அபிஷேகம் செய்யலாம். படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாகவும் இந்த வழிபாட்டை செய்யலாம். கிருஷ்ணருக்கு துளசி, வாசனை மிகுந்த மலர்கள் போன்றவற்றை வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். கிருஷ்ணர் பாதம் போடும் வழக்கம் இருப்பவர்கள் பச்சரிசி மாவினால் போடவேண்டும்.
ஐந்து அகல்விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு தலைவாழை இலை போட்டு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு மற்றும் காரப் பலகாரங்களை நெயில் செய்து வைக்க வேண்டும். இதோடு சேர்த்து நெய், வெண்ணெய், பால், பால் சம்பந்தப்பட்ட இனிப்பு பொருட்கள், அவல், அவல் சார்ந்த இனிப்பு பொருட்கள் போன்ற அனைத்தையும் வைக்க வேண்டும். பிறகு கிருஷ்ணருக்குரிய மந்திரங்கள் தங்களுக்கு எது தெரியுமா அதை கூறி கிருஷ்ணருக்கு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.
அப்படி எந்தவித மந்திரமும் தெரியவில்லை என்பவர்கள் “ஓம் முகுந்தா போற்றி, ஓம் கண்ணா போற்றி, ஓம் கிருஷ்ணா போற்றி” என்னும் போற்றியை 54 முறை கூறி அர்ச்சனை செய்யலாம். அதேபோல “ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே” என்னும் மந்திரத்தையும் 54 முறை கூறி அர்ச்சனை செய்யலாம். கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: பிரச்சினைகளை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி
கண்ணன் அவதரித்த திதியிலும் நட்சத்திரத்திலும் அவரை வீட்டிற்கு அழைத்து அவருக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அவரின் அருளால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.