
வெரைட்டி ரைஸ், ரசம் சாதம், தயிர் சாதம், இவைகளுக்கு தொட்டு சாப்பிட சூப்பரான ஒரு கோவக்காய் வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். எப்போதும் போல இல்லாமல் ஸ்பெஷலான ஒரு மசாலா பொடியை அரைத்து, அந்த பொடியை இந்த கோவக்காய் வறுவலில் சேர்த்து செய்யப் போகின்றோம். ரொம்பவும் வித்தியாசமான சுவையில் காரசாரமான உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த வறுவல் ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க.
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வரமல்லி – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், வர மிளகாய் – 5 போட்டு, இரண்டு நிமிடம் போல அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். இந்த பொருட்கள் எல்லாம் பாதி வறுபட்டவுடன் இதோடு எள்ளு – 1 ஸ்பூன், வேர்கடலை – 2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சேர்த்து படபடவென பொரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து இந்த எல்லா பொருட்களையும் ஆறவைத்து விடுங்கள்.
வறுத்த எல்லா பொருட்களும் ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து 1/4 கிலோ கோவக்காய்களை எடுத்து நீல வாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். மீண்டும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வெட்டி வைத்திருக்கும் கோவக்காய், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு, உப்பு தூளை தூவி கோவக்காய்களை எண்ணெயிலேயே நன்றாக வதக்கி விட வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வதைக்கினால் கோவக்காய் நன்றாக வெந்து வந்துவிடும். முக்கால் பாகம் கோவக்காய் வெந்து வந்தவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியை தேவையான அளவு இந்த கோவக்காய் வறுவலோடு சேர்த்து நன்றாக மொறு மொறுவென வரும் அளவிற்கு வதக்கி விட வேண்டும்.
அவ்வளவு தான். சூப்பரான சுவையான கோவக்காய் வறுவல் தயார். ஆந்திரா குண்டூரில் இந்த கோவக்காய் வறுவல் பிரபல்யமாக செய்யப்படும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோவக்காய் வறுவல் வாரத்தில் ஒரு நாளாவது உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்குறிப்பு: இந்த வறுத்து அரைத்த பொடி மீதம் இருந்தால் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வேறு ஏதாவது வறுவல் செய்யும்போது கூட இந்த பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம். சுவையாக தான் இருக்கும்.