
ஜோதிட ரீதியாகவும் குரு எந்த ராசியில் இருக்கிறார் என்பதை பொறுத்து பலன்கூற மாட்டார்கள். குரு எந்த ராசியை பார்க்கிறார் எந்த இடத்தை பார்க்கிறார் என்பதை பொறுத்துதான் பலனை கூறுவார்கள். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறும் வழக்கம் வந்தது. அப்படிப்பட்ட குருவின் பெயர்ச்சி என்பது இந்த மே மாதத்தில் நடைபெற போகிறது. பொதுவாக எந்த ஒரு கிரக பெயர்ச்சியாக இருந்தாலும் சாதகமான பலன்களை பெறக்கூடிய ராசிகள் என்று ஒரு சில ராசிகள் இருக்கும். மீதம் இருக்கக்கூடிய ராசிகளுக்கு சில பிரச்சினைகள் உண்டாகும். அந்த வகையில் குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய ராசிகள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
குரு பெயர்ச்சியால் சாதகமான பலன்களை பெறக்கூடிய ராசிகளாக துலாம், தனுசு, கும்பம் திகழ்கின்றன. இந்த மூன்று ராசிகளை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய மற்ற ஒன்பது ராசிக்காரர்களும் பின்வரும் இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் குருவின் அருளை பெற முடியும். அதேபோல் ஒருவருடைய சுய ஜாதகத்தில் குருவின் பார்வை சாதகமற்ற நிலையில் இருக்கும் பொழுதும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் குருவின் அருளை பெற முடியும். இந்த பரிகாரங்களை ஏதாவது ஒரு ராசிக்காரர்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. குருவால் பாதிக்கப்பட்ட எந்த ராசிக்காரர்கள் வேண்டுமானாலும் இந்த பரிகாரங்களை செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் குருவின் நல்ல பலனை பெற முடியும்.
முதலாவது பரிகாரமாக நாம் அனைவரும் ஆலயத்திற்கு சென்று தெய்வத்தை தரிசனம் செய்வோம். அவ்வாறு தரிசனம் செய்து முடித்த பிறகு ஐயர் ஆரத்தி தட்டை எடுத்து வருவார். அப்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு தொகையை அந்த தட்டில் போட்டு ஆரத்தியை தொட்டு கண்ணில் வைத்துக் கொள்வோம். இதுதான் பொதுவான வழக்கமாக இருக்கிறது. இதற்கு பதிலாக தரிசனம் செய்வதற்கு முன்பாகவே தட்டில் காணிக்கையை போட்டுவிட்டு பிறகு தரிசனம் செய்து வழிபாடு செய்தோம் என்றால் குருவின் அருள் நமக்கு கிடைக்கும்.
இதே போல் தாங்கள் பிறந்த கிழமை அன்று குருவாக யாரை நினைத்து இருக்கிறோமோ அவர்களை சென்று தரிசனம் செய்து ஆசிர்வாதம் பெறுவதன் மூலமும் குருவின் அருளை பரிபூரணமாக பெற முடியும். ஒரு சிலர் உயிருடன் இருக்கக்கூடிய மனிதர்களை குருவாக நினைத்து இருப்பார்கள். இன்னும் சிலரோ சித்தர்களை தங்களுடைய மானசிக குருவாக நினைத்து இருப்பார்கள். இப்படி யாரையுமே குருவாக நினைக்கவில்லை என்பவர்கள் முருகப் பெருமானை குருவாக நினைத்தும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.
கடைசியாக வியாழக்கிழமை அன்று மண்ணால் செய்யப்பட்ட ஒரு உண்டியலை வாங்கி வர வேண்டும். அந்த உண்டியலின் வெளிப்புறத்தில் மஞ்சளில் பன்னீரை ஊற்றி குழைத்து உண்டியல் முழுவதும் பூச வேண்டும். இப்படி பூசிய இந்த உண்டியலை நம்முடைய வீட்டின் குபேர மூலையில் வைத்து விட வேண்டும். தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரு தொகையை போட்டுக் கொண்டே வரவேண்டும்.
உதாரணமாக இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று நம்முடைய வசதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு தொகையை நாமே தேர்வு செய்து அதை மட்டும் பத்து ரூபாய் என்றால் பத்து ரூபாயாக தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ போட வேண்டும். இப்படி உண்டியலில் நாம் பணத்தை சேர்ப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் குருவால் ஏற்பட்ட பண பிரச்சினைகளும் தன பிரச்சனைகளும் தீரும். உண்டியல் நிறைந்த பிறகு உண்டியலில் இருக்கக்கூடிய பணத்தை எடுத்து அருகில் இருக்கக்கூடிய சித்தர்கள் ஜீவசமாதி உண்டியலில் செலுத்தி விடலாம் அல்லது ஏதாவது ஒரு பொருளாக வாங்கிக் கொடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே:இன்றைய ராசிபலன் – 07 மே 2025
சுய ஜாதகத்தில் குருவினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கவும் குரு பெயர்ச்சியால் சாதகமற்ற பலன்களை பெறாமல் நல்ல பலன்களை பெறவும் மேற்சொன்ன பரிகாரங்களில் ஏதாவது ஒன்றையாவது செய்து குருவின் அருளை பரிபூரணமாக பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.