
தலை முடி பிரச்சனைகளுக்கு கடையில் விற்கப்படும் ஷாம்புகளை வாங்கி உபயோகப்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே கெமிக்கல் எதுவும் சேர்க்காமல் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஷாம்புவை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியின் ஆரோக்கியத்தை நம்மால் மேம்படுத்த முடியும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஷாம்புவை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
கடைகளில் விற்கப்படும் ஷாம்புகளில் அதிகப்படியான கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது நம் அனைவரும் அறிந்த உண்மையே. இந்த கெமிக்கலால் முடி வறட்சி ஏற்பட்டு முடி உதிர்தல் என்பது அதிகரிக்கும். என்னதான் ஆன்டி ஹேர் ஃபால் ஷாம்பூ என்று கூறினாலும் அதில் கெமிக்கல் இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த சூழ்நிலையில் வீட்டிலேயே நம் தலை முடிக்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களை தரும் பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு ஷாம்புவை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
முதலில் பத்து பூந்திக்கொட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் நடுவில் இருக்கும் விதையை எடுத்துவிட்டு அதன் தோலை மட்டும் எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதேபோல் தனியாக ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தையும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். எட்டு மணி நேரம் ஊறிய பிறகு பூந்தி கொட்டையில் அரை லிட்டர் தண்ணீரை ஊற்றி அதில் ஊற வைத்த வெந்தயத்தையும் போட வேண்டும்.
பிறகு அரை எலுமிச்சம் பழத்தை அப்படியே தோளோடு போட வேண்டும். அதற்கு அடுத்தார் போல் மூன்று கொத்து வேப்பிலையை உருவி போட வேண்டும். பிறகு ஒரு கற்றாழை மடலை எடுத்து அதன் தோள் மற்றும் முட்களை சீவி விட்டு உள்ளிருக்கும் சதைப்பகுதியை மட்டும் நன்றாக அலசி விட்டு அதில் சேர்க்க வேண்டும். அடுத்ததாக ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையும், ஒரு கைப்பிடி அளவு மாதுளம் பழ தோலையும் சேர்க்க வேண்டும். மாதுளம் பழத்தோல் காய்ந்ததாகவும் இருக்கலாம் பச்சையாகவும் இருக்கலாம்.
இப்பொழுது இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். அவ்வாறு கொதிக்கும் பொழுது நுரை பொங்கி வர ஆரம்பிக்கும். ஐந்து நிமிடமான பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் ஒரு ரோஜா பூ இதழ்களை போட வேண்டும். இப்பொழுது இந்த கலவையை நன்றாக ஆறவைத்து அதில் இருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு அதன் உள் போட்ட பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு வடிகட்டியை பயன்படுத்தி அரைத்த விழுதை போட்டு நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை அதில் ஊற்றி இந்த கலவையை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி வடிகட்டினால் தான் தலைமுடியில் எந்தவித திப்பிகளும் இல்லாமல் நன்றாக இருக்கும்.
இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் இயற்கையிலேயே நம் தலைமுடி உதிர்வை நிறுத்தி தலை முடி வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் பொடுகு பிரச்சனை எதுவும் வராமல் நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இளநரை பிரச்சினையையும் தீர்க்கும்.
இதையும் படிக்கலாமே: வீட்டிலேயே எளிமையான முறையில் பேசியல் செய்யும் முறை.
நம் கண்ணுக்கு தெரியாத ரசாயன பொருட்களை நம் தலையில் உபயோகப்படுத்துவதற்கு பதிலாக நம் வீட்டிலேயே தயார் செய்த இந்த இயற்கையான ஷாம்புவை பயன்படுத்துவதன் மூலம் நம் முடியின் ஆரோக்கியத்தை நம்மால் பாதுகாக்க முடியும்