- Advertisement -

கர்நாடகா ஸ்பெஷல் பேட்டகிரி சட்னி செய்முறை.

- Advertisement -

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என்ற டிபன் வகைகளுக்கு நாம் பலவிதமான சட்னிகளை தொட்டுக் கொள்வதற்காக செய்வோம். நம்முடைய ஊரில் வடகறி எவ்வளவு சிறப்பு பெற்றதாக திகழ்கிறதோ அதேபோல் கர்நாடகாவில் சிறப்பான ஒரு சட்னி இருக்கிறது. அந்த சட்னி தான் பேட்டகிரி சட்னி. இந்த சட்னியை செய்வதற்கு அதிக அளவில் பொருட்செலவோ நேர செலவோ ஏற்படாது. மிகவும் குறைந்த நேரத்தில் அருமையாக செய்துவிடலாம். அப்படிப்பட்ட பேட்டகிரி சட்னியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

தயிர் – ஒரு கப்,
உடைத்த கடலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை – 2 இனுக்கு
வெங்காயம் – ஒன்று
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

- Advertisement -

செய்முறை

புளிக்காத தயிராக பார்த்து ஒரு கப் தயிரை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் உடைத்த கடலையையும், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஐந்து நிமிடம் மூடி போட்டு ஊற வைத்து விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகுளுந்து, சீரகத்தை போட வேண்டும். இவை இரண்டும் நன்றாக பொரிந்த பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை அதில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் அதில் மஞ்சள் தூளை போட்டு மஞ்சள் தூளின் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். பச்சை வாடை போனதும் அடுப்பை ஆப் செய்து விடுங்கள்.

- Advertisement -

இப்பொழுது அந்த கடாயில் நாம் அரைத்து வைத்திருக்கும் தயிர் விழுதை ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி கழுவி அதில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் உடைத்த கடலை போட்டிருப்பதால் அது சற்று கெட்டியாகும் என்பதால் நம்முடைய தேவைக்கு ஏற்றார் போல் தண்ணீரை அதில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதை நன்றாக கரண்டியை வைத்து கலந்து விடுங்கள்.

நன்றாக கலந்து விட்ட பிறகு அடுப்பை திரும்பவும் ஆன் செய்து இதை வைத்து விட்டு தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்து நன்றாக கலந்து விட்டு இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பேட்டரி சட்னி தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: ரோட்டு கடை பரோட்டா சால்னா

எப்பொழுதும் ஒரே மாதிரி சட்னியை செய்வதை தவிர்த்து விட்டு இப்படி மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய பிரசித்தி பெற்ற சட்னிகளை செய்து தரும்பொழுது எப்பொழுதும் சாப்பிடும் அளவை விட சற்று கூடுதலாக சாப்பிடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -