
இட்லி செய்யனும்னா கஷ்டப்பட்டு மாவு அரைக்க வேண்டும் என்ற அவசியம் இனி கிடையாது. இன்ஸ்டன்டாக இந்த மாவை அரைத்து வைத்துக்கொண்டால், புசுபுசுவென வெள்ளை நிறத்தில் சூப்பரான இட்லியை நம்மால் செய்ய முடியும். இந்த இன்ஸ்டன்ட் இட்லி மாவை எந்தெந்த அளவுகளில் பொருட்களை சேர்த்து அரைப்பது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த இட்லி மாவை பக்குவமாக அரைத்தால் மூன்று மாதங்கள் வரை ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். உங்கள் வீட்டு அருகில் ரைஸ்மில் இருந்தால் அங்கு கொண்டு போயும் இந்த மாவை அரைத்து எடுத்து வரலாம். ரைஸ்மில் உங்கள் வீட்டின் அருகில் இல்லை என்றால், உங்கள் வீட்டு மிக்சி ஜாரில் இந்த மாவை அரைத்து வைத்துக் கொள்ளலாம். சரி வாங்க ரெசிபியை பார்த்திடலாம்.
முதலில் இந்த மாவு அரைக்க எந்தெந்த பொருட்களை எந்தெந்த அளவுகளில் எடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். உங்களுடைய வீட்டில் 200ml அளவிற்கு ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளரில் எல்லா பொருட்களையும் அளந்து கொள்ளலாம்.
இட்லி அரிசி – 4 டம்ளர், பச்சரிசி – 2 டம்ளர், உளுந்து – 1 டம்ளர், அவல் – 1 டம்பளர், வெந்தயம் – 4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் முதலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சரியான அளவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் இட்லி அரிசியையும் பச்சரிசியும் ஒன்றாகப் போட்டு நன்றாக கழுவி அதன் பின்பு அரிசியை 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசியை ஊறவைக்கும் தண்ணீரில், ஒரு டேபிள்ஸ்பூன் கல் உப்பையும் சேர்த்து தண்ணீரை நன்றாக கலந்து விட்டு ஊற வைத்தால், இட்லி வெள்ளையாக கிடைக்கும்.
உளுத்தம் பருப்பையும் வெந்தயத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாகக் கழுவி அதன் பின்பு உளுத்தம் பருப்பையும் நல்ல தண்ணீரை ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அவலை ஊற வைக்கக் கூடாது. அப்படியே இருக்கட்டும். என்ன செய்வது என்று பார்க்கலாம்.
ஊறிய அரிசியையும் உளுந்தம் பருப்பையும் தண்ணீரை வடித்துவிட வேண்டும். தண்ணீர் வடித்த இந்த பொருட்களையும் வெள்ளைத் துணியில் பரப்பி எட்டு மணி நேரம் நன்றாக ஃபேன் காற்றிலேயே ஆற வைத்தால் போதும். வெயிலில் உலர வைக்க முடியும் என்று நினைப்பவர்கள் நல்ல வெயிலில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் காய வைத்து எடுத்துக் கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம்தான்.
இப்போது அவல் இருக்கிறது அல்லவா. அந்த அவலை ஒரு முறை தண்ணீரில் போட்டு அலசி எடுத்து, இந்த அரிசி உளுந்துடன் எட்டு மணி நேரம் காய வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
எல்லா பொருட்களும் நன்றாக காய்ந்து வந்தவுடன் இந்த பொருட்களை ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். மிக்ஸியில் அரைக்க வேண்டும் என்றால் இதனுடைய அளவு அதிகம் என்பதால் கொஞ்சம் நேரம் எடுக்கும், உங்களுடைய மிக்ஸியும் தாங்க வேண்டும். குறைந்தது இந்த மாவை மிக்ஸியில் அரைக்க 30 நிமிடங்களாவது எடுக்கும்.
அரைத்த இந்தப் பவுடரை ஒரு சில்வர் டப்பாவில் கொட்டி அதில் நான்கு வரமிளகாய்களை ஆங்காங்கே போட்டு வைத்துவிட்டால் மூன்று மாதங்கள்வரை வண்டு பூச்சி வராமல் இருக்கும். இந்த மாவில் இருந்து எப்படி இட்லி செய்வது.
இந்த மாவில் இருந்து உங்களுக்கு தேவையான அளவு மாவை மட்டும் எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி உங்கள் கையை வைத்து நன்றாக கரைத்து விட வேண்டும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். கட்டி படாமல் கரைத்து வைக்க வேண்டும். கூடவே இட்லி மாவு தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மாவை மூடி போட்டு அப்படியே எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
புளித்து வந்த மாவில் எப்போதும் போல இட்லியை ஊற்றி வைத்தால் புசுபுசுவென பஞ்சு போல இட்லி கிடைத்துவிடும். நிச்சயமாக இதை இன்சன்ட் மாவில் செய்தீர்கள் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். இதே மாவில் தோசை சுடலாம். ஊத்தப்பம் சுடலாம். பணியாரமும் செய்யலாம் அது நம்முடைய இஷ்டம் தான். இனி இட்லி சுட வேண்டும் என்றால் கிரைண்டரில் மிக்ஸியில் மாவு போட்டு அரைத்து கஷ்டப்பட வேண்டிய அவசியமே கிடையாது. ஒரே ஒரு முறை இந்த ரெடிமேட் இட்லி மாவை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.