
குழந்தைகள் வீட்டில் இருந்தாலே மாலை நேரம் வந்துவிட்டால் ஏதேனும் சுவையாக சாப்பிட கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்காக தினமும் ஒரு ஸ்நாக்ஸை யோசித்து செய்ய வேண்டியிருக்கும். அதற்காக நிறைய நேரமும் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் வீட்டில் எப்பொழுதும் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை மட்டும் வைத்து செய்யும் மிகவும் சுவையான இந்த கார குழிப்பணியாரத்தை சட்டென ஐந்தே நிமிடத்தில் செய்துவிடலாம். இந்த பணியாரத்துடன் கார சட்னி அல்லது புதினா சட்னி சேர்த்து சுவைத்துப் பார்த்தால் அவ்வளவு அருமையாக இருக்கும் தெரியுமா? வாருங்கள் இந்த கார குழிபணியாரத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
முதலில் ஒரு வாயகன்ற கிண்ணத்தில் ஒரு கப் ரவை மற்றும் அரை கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அரைமணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு ஒரு பெரிய வெங்காயம் மற்றும் ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு பேன் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம்பருப்பு, அரை ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
வதக்கிய இவையனைத்தையும் ஊற வைத்துள்ள ரவை, தயிர் கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். மாவு சற்று கெட்டியாக இருந்தது என்றால் மீண்டும் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு முறை கலந்து விடவேண்டும். தோசை மாவு பதத்திற்கு இல்லாமல் சற்று கெட்டியான பதத்திற்கு இந்த மாவு இருக்க வேண்டும். இறுதியாக இந்த மாவிற்கு தேவையான உப்பை அரை ஸ்பூன் சேர்த்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன்மீது குழிப்பணியாரக் கல்லை வைத்து ஒவ்வொரு குழியிலும் அரைஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு கலந்து வைத்துள்ள மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றிக் கொண்டு, மூடி போட்டு 5 இலிருந்து 7 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு மூடியை திறந்து ஒவ்வொரு குழிப்பணியாரத்தையும் குழிப்பணியார கரண்டியைப் பயன்படுத்தி திருப்பி போட வேண்டும். மீண்டும் ஒரு 5 நிமிடம் நன்றாக வேகவைத்து குழிப்பணியாரம் அனைத்தையும் ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான குழிப்பணியாரம் தயாராகிவிட்டது. இதனுடன் தொட்டுக்கொள்ள புதினா சட்னி அல்லது கார சட்னியை சேர்த்துக்கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த குழி பணியாரம் செய்வதற்கு ரவை மற்றும் தயிர் இவை இரண்டு பொருட்கள் மட்டும் இருந்தாலே போதும் இதனை டீ போடும் நேரத்திலும் சட்டென செய்த முடித்துவிடலாம்.