
2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 புதன்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில் அனைவரும் தங்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வ அருள் எந்த அளவிற்கு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அருகில் குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜனவரி ஒன்றாம் தேதி குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம். ஒரு வேளை குலதெய்வ ஆலயத்திற்கு செல்ல இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்தை எந்த முறையில் வழிபட்டால் அந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும் அந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்க வேண்டும், முந்தைய வருடத்தில் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று பல எண்ணங்களை கொண்டுதான் நாம் செயல்படுவோம். அதனால்தான் வருடப் பிறப்பு நாள் அன்று ஆலயத்திற்கு சென்று தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். அதேபோல் வீட்டிலும் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வோம். எந்த தெய்வத்தை நாம் வழிபடுகிறோமோ இல்லையோ அன்றைய தினத்தில் குலதெய்வத்தை நாம் வழிபட வேண்டும். அப்படி குலதெய்வத்தை வழிபாடு செய்வதற்குரிய ஒரு எளிமையான முறையை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
எந்த ஒரு தெய்வ வழிப்பாடாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்தோம் என்றால் அதற்குரிய பலன் அதிகமாகவே இருக்கும். அதனால் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு வாசலில் கோலமிட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய குலதெய்வத்தின் படத்தை சுத்தம் செய்து வாசனை நிறைந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். தங்களால் எந்த பொருளை குலதெய்வத்திற்கு நெய்வேத்தியமாக வைக்க முடியுமோ அதை வைத்துக் கொள்ளுங்கள். எதையுமே அந்த நேரத்தில் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் ஒரு சுத்தமான டம்ளரில் சுத்தமான தண்ணீரை பிடித்து வைத்தால் கூட போதும்.
அடுத்ததாக ஒரே ஒரு உதிரி பூவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பூவிற்கு நடுவே சந்தனத்தை தடவிக் கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு உரசிய சந்தனமாக இருந்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். அப்படி சந்தன கட்டை கிடைக்கவில்லை என்பவர்கள் நாம் பயன்படுத்தக்கூடிய சாதாரண சந்தனத்தை கூட அந்த மலரின் மேல் தடவி விட்டு அதை குலதெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
அடுத்ததாக இரண்டு ஊதுபத்திகளை ஏற்றி வைத்து குலதெய்வத்திற்கு தூப ஆராதனை காட்டி தூபத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்றாவதாக தீபம் ஏற்றி வைத்திருப்போம் அல்லவா? அந்த தீபத்தையும் எடுத்து குலதெய்வத்திற்கு காட்டி தீபத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும். அடுத்ததாக நாம் எந்த பொருளை நெய்வேத்தியமாக வைத்தோமோ அந்த பொருளை குலதெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்த முறையில் ஜனவரி ஒன்றாம் தேதி மட்டும் அல்லாமல் தினமும் நம் குலதெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்தோம் என்றால் ஜனவரி ஒன்றாம் தேதி கிடைப்பது போலவே ஒவ்வொரு நாளும் நமக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே:பணவசியம் ஏற்பட ஜனவரி ஒன்றாம் தேதி ஏற்ற வேண்டிய தீபம்
வருடத்தின் முதல் நாள் குலதெய்வத்தை முழுமனதோடு இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளால் அந்த வருடம் முழுவதும் சிறப்பான வருடமாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.