- Advertisement -

அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எதற்கும் மருத்துவமனைக்கு சென்றது கிடையாது. மருந்துகளை சாப்பிட்டது கிடையாது. தங்களுடைய உணவிலேயே தங்கள் பிரச்சினைக்குரிய மருந்துகளை சேர்த்து உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். வயதிற்கு வந்த பெண் பிள்ளைகளுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும் அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கு என்று மருத்துவப் பொருட்கள் மிகுந்த குழம்பை வைத்து கொடுப்பார்கள். அந்த குழம்பை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம்.

இந்த குழம்பை வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதன் மூலம் நம்முடைய பற்களுக்கும், ஈறுகளுக்கும் ஆரோக்கியம் ஏற்படும். ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். தலை முடி உதிர்தல் குறைய ஆரம்பிக்கும். எலும்புகள் ஆரோக்கியமாக திகழும். மாதவிடாய் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இந்த குழம்பு ஒரு அருமருந்தாக திகழ்கிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய கழிவுகளை நீக்குவதற்கும், தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கும் இந்த குழம்பு மிகவும் உதவி புரிகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 4 ஸ்பூன்
  • கடுகு – ஒரு கைப்பிடி
  • சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
  • முழு பூண்டு – 1
  • மிளகாய் – 7
  • மல்லி – ஒரு கைப்பிடி
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • தக்காளி – 1
  • கருவேப்பிலை – 2 இனுக்கு
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் கடுகை போட்டு கடுகு பொரிந்ததும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் தோலுரித்த சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். அடுத்ததாக முழு பூண்டையும் தோலுரிக்காமல் பூண்டின் நடுவில் இருக்கும் காம்பை மட்டும் நீக்கிவிட்டு சேர்க்க வேண்டும். இப்பொழுது இந்த பூண்டையும் வெங்காயத்தையும் நன்றாக வதக்கி அதையும் கடுகுடன் சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மறுபடியும் இதே கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாய், மல்லி இரண்டையும் சேர்த்து நன்றாக வறுத்து அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியை எடுத்து கடாயில் போட்டு அடுப்பில் வைக்காமல் கடாயின் சூட்டிலேயே புளியை நன்றாக வதக்கி அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் அம்மி இருந்தால் அம்மியை உபயோகப்படுத்துங்கள். அதில் அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த விழுதும் சூடாகாமல் இருக்கும். இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்க வேண்டும். பிறகு இதில் கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

பிறகு இதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி மிக்ஸியை நன்றாக கழுவி அந்த தண்ணீரை இந்த கடாயில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அடுத்ததாக தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இது மருந்து குழம்பு என்பதால் சாம்பார், காரக்குழம்பு போல தண்ணியாக இருக்காது. லேகியம் போல தொக்கு போல கெட்டியாக தான் இருக்கும்.

- Advertisement -

இந்த குழம்பு நன்றாக சுண்டி எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மிளகை எடுத்து இடி கல்லில் போட்டு இடித்து இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் மருத்துவ குணம் மிகுந்த கடுகு குழம்பு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே:சுரக்காய் அல்வா செய்முறை

இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் மருத்துவ குணம் மிகுந்த பொருட்கள் என்பதால் நம்முடைய வீட்டில் 10 நாட்களுக்கு ஒரு முறையோ மாதத்திற்கு இரண்டு முறையோ செய்து கொடுத்து நம் வீட்டில் இருக்கும் அனைவரின் ஆரோக்கியத்தையும் பேணி காப்போம்.

- Advertisement -