சுரக்காய் அல்வா செய்முறை

surakkai halwa
- Advertisement -

நம்முடைய கால நிலைக்கு ஏற்ப சில காய்கறிகளை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக திகழும். அந்த வகையில் இந்த வெயில் காலத்தில் நம்முடைய உணவில் நாம் அதிகமாக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நீர்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றுதான் சுரக்காய். நாம் பொரியலாகவோ கூட்டாகவோ செய்து தரும் பொழுது பலரும் அதை விரும்பி உண்ண மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்காகவே மிகவும் அருமையான சுவையில் சுரைக்காயை வைத்து எளிதில் செய்யக்கூடிய அல்வாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

சுரைக்காயில் வைட்டமின் பி, சி போன்ற சத்துக்கள் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இதில் நீர்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இரும்பு சத்து, தாது உப்பு, பாஸ்பரஸ், புரதம், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்களும் இதில் உள்ளது. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். உடல் சூடு குறையும். கோடை காலத்தில் ஏற்படும் நாவறச்சியை போக்கும். கை கால் எரிச்சல் நீக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும், நரம்புகள் புத்துணர்ச்சி பெறவும், உடல் வலுவடையும் உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • சுரக்காய் – 300 கிராம்
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • பால் – 200 எம்எல்
  • ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
  • சர்க்கரை – 150 கிராம்
  • உப்பு – 1 சிட்டிகை
  • முந்திரி – 10
  • பாதாம் பிஸ்தா – விருப்பத்திற்கு ஏற்றவாறு

செய்முறை

முதலில் சுரக்காயை தோலை சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிஞ்சு சுரைக்காயாக இருக்கும் பட்சத்தில் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுக்க வேண்டாம். சற்று முதிர்ச்சியான காயாக இருக்கும் பட்சத்தில் சுரைக்காய்க்குள் இருக்கும் விதைப்பகுதி நீக்கிவிட வேண்டும். பிறகு இந்த சுரைக்காயை கேரட் துருவுவது போல் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி நெய் உருகியதும் அதில் முந்திரி பருப்பை வருத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் நெய்யில் நாம் துருவி வைத்திருக்கும் சுரைக்காயை சேர்த்து குறைந்தது ஐந்து நிமிடம் ஆவது வதக்க வேண்டும். இவ்வாறு வதக்கும் பொழுது சுரைக்காயில் இருக்கக்கூடிய நீச்சத்துக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

- Advertisement -

ஐந்து நிமிடம் கழித்து இதில் பாலை ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு வேகவைத்து விட வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்பொழுது சுரைக்காயை கிண்டி விட வேண்டும். 15 நிமிடம் கழித்து சுரைக்காய் நன்றாக பாலிலேயே வெந்த பிறகு ஏலக்காய், சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

சுரைக்காய் நன்றாக சுருண்டு நெய் பிரியும் அளவிற்கு வந்த பிறகு இதில் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பையும் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் பாதாம் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை திருதியோர் அல்லது சிறிது சிறிதாக நறுக்கியோ அலங்காரமாக தூவி விட்டுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கொத்தமல்லி தொக்கு செய்முறை

மிகவும் அருமையான அதே சமயம் சுலபமான ஆரோக்கியமான சுரக்காய் அல்வாவை நாமும் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுப்போம்.

- Advertisement -