
பண்டிகைகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் என்னென்ன பலகாரம் செய்யலாம் என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருப்போம். சில பலகாரங்கள் நமக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அது கடையில் வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்தால் அதன் விலை அதிகமாக இருக்கும். இந்த காஜூ கட்லியும் இதே வகையில் சேர்ந்தது தான். சாப்பிட அத்தனை சுவையாக இருக்கும் ஆனால் இது முழுவதுமே முந்திரியை வைத்து செய்யப்படுவதால் விலையும் சற்று கூடுதலாக இருக்கும். கடைகளில் வாங்கினாலும் ஒன்று இரண்டு தான் குழந்தைகளுக்கு கொடுக்க முடியுமே தவிர தாராளமாக சாப்பிட முடியாது. இனி இப்படி நீங்கள் உங்களுக்கு பிடித்ததை சாப்பிட யோசிக்கவே வேண்டாம். வீட்டிலேயே மிக மிக எளிமையாக கடைகளில் கிடைக்கும் காஜூ கட்லியை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: முந்திரி – 2 கப், சர்க்கரை – 1கப், பால் பவுடர் -1/4 கப், நெய் -1டேபிள் ஸ்பூன் இவ்வளவு தான் இதற்கு தேவையான பொருள்.
இதற்கு முந்திரி நல்ல தரமானதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். பழைய நமத்து போன முந்திரியை வைத்து செய்தால் அத்தனை நன்றாக வராது. எனவே நன்றாக இருக்கும் முந்திரி எடுத்து முதலில் ஒரு கப் அளவு மிக்ஸி ஜாரில் போட்டு அதிகம் அரைத்து விடக்கூடாது ஒன்று அல்லது இரண்டு சுற்று மட்டும் விட்டு எடுத்து விடுங்கள். அதை ஒரு ஜல்லியில் வடித்த பிறகு மீதி திப்பி போன்று இருக்கும். அதை மறுபடியும் ஜாரில் சேர்த்து இப்போது ஏற்கனவே எடுத்து வைத்த அந்த இன்னொரு கப் முந்திரியும் சேர்த்து அதே போல் ஒன்று அல்லது இரண்டு சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். ஏனென்றால் மிக்ஸியில் இது அதிக நேரம் அரை பட்டால் இதிலிருந்து எண்ணெய் போன்று வந்து விடும் அதன் பிறகு காஜூ கட்லி செய்ய முடியாது. இதை அரைத்து ஜல்லில் வடித்த பிறகு நல்ல பவுடராக இருக்க வேண்டும். ஆனால் பைன் பவுடராகவும் அரைக்கக் கூடாது இதற்கு இந்த காஜு கட்லி அரைக்கும் பதம் கொஞ்சம் கவனமாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தது இப்படி அரைத்த பவுடரை சலித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதி இருக்கும் சக்கை நீங்கள் எடுத்து வைத்து விடுங்கள் நீங்கள் வேறு ஏதாவது ரெசிபி செய்யும் போது அதில் இதை சேர்த்து செய்து கொள்ளலாம். இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு கப் சர்க்கரை சேர்த்து அதில் சர்க்கரை கரைய கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும். இதற்கு சர்க்கரை ஒரு கம்பி பதம் வர வேண்டும். அதாவது சர்க்கரை கொதிக்கும் போது உங்கள் கைகளில் தொட்டு பார்க்கும் போது ஒட்டி உடனே பிரிந்து விடும் இவ்வாறு இருந்தால் அது ஒரு கம்பி பதம்.
இந்த பதம் வந்தவுடன் அரைத்து வைத்த முந்திரி பவுடரை போட்டு நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். இப்போது அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து கிண்டி கொண்டே இருங்கள். இப்படி இந்த சர்க்கரையும், முந்திரியும் நன்றாக கலந்து ஒரு முக்கால் பதம் அளவு வேகும்படி வந்தவுடன் பால் பவுடரை இதில் சேர்த்து மேலும் நன்றாக கிளறி விடுங்கள்.
நீங்கள் கிளறி கொண்டிருக்கும் கரண்டியில் இருந்து இந்த முந்திரி சக்கரை பால் பவுடர் கலந்த கலவை எடுத்து ஊற்றினால் அது ஒரு ரிப்பன் போல வர வேண்டும். இந்த பதம் வந்ததும் அதில் நெய் சேர்த்து லேசாக ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள்.
இதன் பிறகு இதை ஒரு பட்டர் பேப்பரில் மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற எதிலும் இதை சேர்த்தால் உங்களுக்கு இந்த மாவு பிசைய சரியாக வராது. எனவே பட்டர் பேப்பரில் எடுத்து இதை ஊற்றி அந்த பட்டர் பேப்பரை மேலும் கீழுமாக மடித்து மாவை உருட்டி கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இதை செய்யும்போது மாவு மிதமான சூட்டில் இருக்க வேண்டும் அதிக சூட்டுடன் இருக்கும் போதும் செய்யக்கூடாது, ஆறிய பிறகும் செய்யக்கூடாது உங்கள் கைப் பொறுக்கும் சூட்டில் இருக்கும் போது இப்படி நீங்கள் இந்த மாவை கொஞ்சமாக அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ள வேண்டும்.
இதன் பிறகு இதற்கு மேலே இன்னொரு பட்டர் பேப்பரை வைத்து சப்பாத்தி பூரி திரட்டும் கட்டையை வைத்து இந்த மாவை ஒரு அரை இன்ச் அளவிற்கு நன்றாக திரட்டிக் கொள்ளுங்கள். இதை வட்டமாகவோ நீளமாகவோ உங்களுக்கு எப்படி உருட்ட வருகிறதோ அந்த வசதிப்படி உருட்டிக் கொள்ளுங்கள் ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல் அரை இன்ச் அளவிற்கு அனைத்து பக்கங்களும் சரியாக வரும்படி திரட்டிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: ஒரே மாதிரி தோசை சாப்பிடாமல் ஆரோக்கியமாக இப்படி ஒரு முறை மணத்தக்காளி கொண்டு கீரை தோசை 10 நிமிஷத்துல செஞ்சு பாருங்க, குழந்தைகள் கூட அடிக்கடி கேட்பாங்க!
இதன் பிறகு பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு நீங்கள் உங்களுக்கு தேவையான விருப்பத்தில் கத்தியில் கொஞ்சம் நெய் தேய்த்து கொண்டு துண்டு போட்டு வைத்து விடுங்கள். இவை அனைத்துமே உங்கள் கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போது தான் செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஸ்டெப்பையும் கரெக்டாக ஃபாலோ பண்ணினால் அருமையான ஒரு காஜூ கட்லியை நீங்கள் வீட்டிலேயே செய்துவிடலாம்.