
தொன்று தொட்டு எல்லோருடைய வீடுகளிலும் காமாட்சி அம்மன் விளக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இன்றுவரை ஏற்றப்பட்டு வருகிறது. வீட்டில் மற்ற விளக்குகள் எரியாவிட்டாலும், காமாட்சி அம்மன் விளக்கு மட்டும் இந்து சமய சாஸ்திரத்தை பின்பற்றும் எல்லோருடைய வீடுகளிலும் எரிந்து கொண்டிருக்கிறது. ஏன் இந்த விளக்கிற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? என்னும் ஆன்மிகம் சார்ந்த சுவாரசியமான தகவல்களை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
காமாட்சி அம்மன் என்பவள் காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்தி ஆவார். காஞ்சிபுரத்தில் இருக்கும் எல்லா கோவில்களிலும் அம்மன் காமாட்சியாகவே அருள் பாலிக்கின்றாள். காமாட்சி அம்மன் ஒருமுறை உலக நன்மைக்காக வேண்டி கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தாள். உலகம் சுபீட்சமாக இருக்கவும், உலக மக்கள் யாவரும் கொடியவர்களிடம் அகப்பட்டு துன்புராமல் பாதுகாப்புடன் வாழவும் தவம் புரிந்து கொண்டிருந்த காமாட்சியின் இந்த கடுமையான முயற்சிக்கு மற்ற எல்லா கடவுள்களும் தலைவணங்கி அவளுக்குள் ஐக்கியமாகிவிட்டனர்.
காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வழிபடுபவர்களுக்கு எல்லா தெய்வங்களுடைய அருளாசியும் கிடைக்கும் என்பதனால் தான் மற்ற எல்லா விளக்குகளை காட்டிலும் காமாட்சி அம்மன் விளக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கினர். அதுதான் இன்றுவரையிலும் எல்லோருடைய வீடுகளிலும் நடைமுறையில் ஏற்றப்பட்டு வருகிறது. குலதெய்வத்திற்கு இணையாக இருக்கக்கூடிய இந்த காமாட்சி அம்மன் ரொம்பவும் சக்தி வாய்ந்தவள்.
குலதெய்வம் தெரியாதவர்கள் காமாட்சி அம்மனை குலதெய்வமாக ஏற்று வழிபட்டால் குலதெய்வ குற்றம் ஏற்படாமல் குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை. குலதெய்வம் தெரிந்தவர்கள் காமாட்சி அம்மன் விளக்கை தினமும் ஏற்றி வருவதால் குலதெய்வத்தின் அருளும், காமாட்சி அம்மனுடைய அருளும் ஒருசேர கிடைக்க பெற்று நிம்மதியான வாழ்க்கையை பெறுவார்கள் என்பது ஐதீகம். துன்பம் வரும் பொழுதெல்லாம் நீங்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வைத்து, உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து வழிபடலாம்.
காமாட்சி அம்மன் விளக்கில் லக்ஷ்மி, சரஸ்வதி, துர்கை ஆகிய மூன்று பேருடைய சக்தியும் அடங்கியிருக்கிறது. இந்த விளக்கை ஏற்றுவதால் மூன்று தேவியர்களின் அருளும், முப்பெரும் செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருவருக்கு தேவையான வரங்களாகும். இந்த மூன்றும் ஒருவருக்கு நிலையாக இருக்க தினமும் வீட்டில் காமாட்சி அம்மனை நினைத்து, உங்களுடைய குலதெய்வத்தை வேண்டி வணங்கி, காமாட்சி அம்மன் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
உணவே மருந்து
காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது மிகவும் சுத்தமாக ஏற்ற வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கு ஜோதி சுடர் விட்டு நேராக எரிய வேண்டும். விளக்கை முறையாக புஷ்பத்தைக் கொண்டு தான் அணைக்க வேண்டும். எல்லா கடவுள்களும் ஒன்றாக இருக்கும் அந்த இடத்தில் எந்த குற்றமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கில் ஊற்றக்கூடிய எண்ணெய் தரமானதாக இருக்க வேண்டும். இந்த எண்ணெய் பச்சை நிறத்திற்கு மாறும் வரை அப்படியே விட்டு வைக்கக் கூடாது. எண்ணெய் தீர்ந்து, திரி கருகி தீபத்தில் நெருப்பு பட்டு கருப்பாக மாறக்கூடாது. இவற்றையெல்லாம் நீங்கள் கவனமாக பின்பற்ற வேண்டும். மேலும் காமாட்சி அம்மன் விளக்கை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துலக்க கூடாது. மற்ற நாட்களில் முன்னரே துலக்கி வைக்க வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கிற்கு சந்தன, குங்குமம் வைப்பதை விட மஞ்சள், குங்குமம் வைப்பது தான் முறையானது.