
வாராகி அம்மன் வழிபாடு என்பது இன்றைய காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. வீட்டிலும் சரி ஆலயத்திலும் சரி வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமியிலும் வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை போன்ற கிழமையிலும் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கத்தை பலரும் வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய வீட்டிலேயே அனுதினமும் வாராகி அம்மனை வழிபாடு செய்து கொண்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நாம் எந்த முறையில் வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்வதாக இருந்தாலும் ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து தான் நாம் வழிபாடு செய்வோம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பலரும் வழிபாடு செய்வதில்லை. ஏதாவது ஒரு காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு அது விரைவில் நடைபெற வேண்டும் என்றுதான் வழிபாடுகளையும் வேண்டுதல்கள் நாம் முன் வைப்போம். அந்த வகையில் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி 45 நாட்களில் நடைபெறுவதற்கு வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டு முறையை வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி அல்லது அஷ்டமி திதி வரும் நாட்களில் ஆரம்பிக்க வேண்டும். வீட்டில் வாராஹி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு முன்பாக ஆறு தீபங்களை ஏற்ற வேண்டும். நெய்வேத்தியமாக வாராஹி அம்மனுக்கு பிடித்த மாதுளம் பல முத்துக்களை தேனில் கலந்து வைக்க வேண்டும். வலது கையின் மோதிர விரலில் வாசனை மிகுந்த தாழம்பூ குங்குமத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது வாராகி அம்மனின் பின்வரும் காரிய சித்தி மந்திரத்தை ஒருமுறை கூறி வாராகி அம்மனுக்கு முன்பாக ஏதாவது ஒரு இலை அல்லது கிண்ணத்தை வைத்து அதில் இந்த குங்குமத்தை போட வேண்டும். நேரம் இருப்பவர்கள் ஆறு முறை கூறலாம். நேரமில்லாதவர்கள் ஒரு முறை மட்டும் கூறினால் போதும். இவ்வாறு கூறி முடித்துவிட்டு எந்த காரியம் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த காரியம் நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்துக் கொள்ளுங்கள். அந்த காரியம் தொடர்பாக வெளியில் செல்லும் பொழுது வாராகி அம்மனுக்கு அர்ச்சனை செய்த இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
இப்படி தினமும் 45 நாட்கள் தொடர்ச்சியாக நாம் செய்யும்பொழுது இந்த வழிபாட்டை நிறைவு செய்வதற்கு முன்பாகவே அந்த காரியம் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும். 45 நாட்களும் சுத்தமாக இருக்க வேண்டும். அசைவத்தை தவிர்ப்பது நல்லது. எந்தவித தீட்டு காரியங்களிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு விரதத்தை அனுஷ்டிப்பது போல அனுஷ்டித்து வழிபாடு செய்யும் பொழுது விரைவிலேயே வாராகி அம்மனின் அருளைப் பெற முடியும்.
“ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் சுக்ல வாராகி மம ரக்ச ரக்ச வார்த்தாலி வார்த்தாலி வாராகி வாராகி சகல காரிய சித்திம் அனுக்கிரகம் குரு குரு”
இதையும் படிக்கலாமே: வெற்றிகளைத் தரும் முருகனின் திருநாமம்
சக்தி வாய்ந்த இந்த மந்திர வழிபாட்டை முழுமனதோடு வாராகி அம்மனை நினைத்து அனுதினமும் கூறுபவர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய செயலில் வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.