
சாவித்திரி தேவி தன்னுடைய கணவரை எமதர்ம ராஜனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக இருந்த விரதத்தை தான் காரடையான் நோன்பு விரதம் என்று கூறுகிறோம். இந்த விரதத்திற்கு சாவித்திரி விரதம், காரடையான் விரதம் என்று பலவிதமான பெயர்கள் இருக்கின்றன. முழுமனதோடு கணவன் நன்றாக இருக்க வேண்டும், தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்க வேண்டும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்க வேண்டும், திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த விரதத்தையும் வழிபாட்டு முறையையும் மேற்கொள்ளலாம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் காரடையான் நோன்பு அன்று எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
காரடையான் நோன்பு என்பது மாசி மாதம் 30ஆம் தேதி மார்ச் மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வீட்டு பூஜை அறையில் தீபமேற்றி விரதம் இருக்க ஆரம்பித்து மாலை 6 மணிக்கு மேல் அம்பாளை வழிபாடு செய்து விட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். விரதம் இருக்க இயலாதவர்கள் வழிபாட்டை மட்டும் மேற்கொள்ளலாம்.
அன்றைய தினத்தில் தாலிக்கயிறு மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை 7:00 மணியிலிருந்து 7:20 மணிக்குள்ளோ அல்லது 9:45 இல் இருந்து 10:30 மணிக்குள்ளோ தாலிக்கயிறை மாற்றிக் கொள்ளலாம். அன்றைய தினத்தில் வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக காலை 6:30 லிருந்து 7:30, காலை 9.30 இல் இருந்து 10:30, மதியம் 12.30 இல் இருந்து 1:30, மாலை 6:30 லிருந்து 8:30 போன்ற நேரங்களில் தங்களுடைய வசதிக்கேற்ப ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த வழிபாட்டை செய்யலாம்.
வீட்டில் இருக்கக்கூடிய பெண் தெய்வத்தின் படம் அல்லது சிலைக்கு சந்தனம் குங்குமம் வைத்து வாசனை நிறைந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்யலாம். எத்தனை நபர்களை வீட்டிற்கு அழைக்கிறோமோ அத்தனை எண்ணிக்கையில் நோன்பு கயிறு தயார் செய்து வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு பெண் தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்தின் படத்திற்கு முன்பாக ஒரு வாழையிலையை விரித்து அதில் கார அரிசி மற்றும் காராமணி இரண்டும் சேர்த்து இனிப்பு அடையாக செய்து வைக்க வேண்டும். பிறகு இதில் உருகாத வெண்ணெய் வைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு வாழைப்பழம் போன்றவற்றை வைத்து தேங்காயை உடைத்து கற்பூரம் ஏற்றி பின்வரும் இந்த ஒரு தெய்வீக வாக்கியத்தை முழுமனதோடு கூறி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி முடித்த பிறகு கணவனின் கைகளால் நோன்பு கயிறை வாங்கி கழுத்திலோ அல்லது கையிலோ கட்டிக் கொள்ளலாம்.
“உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்”
இதையும் படிக்கலாமே:பண வசியத்தை அதிகரிக்கும் குபேர பௌர்ணமி
இந்த முறையில் காரடையான் நோன்பு அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு சாவித்திரி தேவி மற்றும் அம்பாளின் அருளால் தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.