- Advertisement -
சமையல் குறிப்புகள்

எப்படா இதை சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிடுவோம் என்று நினைக்கும் அளவிற்கு நாவூறும் சுவையில் கத்திரிக்காய் தொக்கு ரெசிபி உங்களுக்காக.

- Advertisement -

சமைக்கும் போதே நமக்கு நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கி விடும். இதை எப்போது சாதத்தில் போட்டு சாப்பிடுவோம் என்ற ஆர்வம் நம்மை கட்டுப்படுத்தவே முடியாது. அந்த அளவிற்கு ருசியான சுலபமான கத்திரிக்காய் தொக்கு எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை கத்திரிக்காய் சட்னி என்றும் வைத்துக் கொள்ளலாம். பெயர் வைப்பது நம்முடைய விருப்பம்தான். என்ன பெயர் வைத்தால் என்ன? ருசிக்கு மட்டும் குறைவு இருக்க கூடாது அல்லவா. அப்படிப்பட்ட சூப்பரான ஒரு ரெசிபி இன்னைக்கு உங்களுக்காக.

முதலில் ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை நன்றாக தனித்தனியாகப் பிரித்து பவுலில் போட்டு, அதில் கொதிக்கும் சுடு தண்ணீரை ஊற்றவேண்டும். சுடு தண்ணீரில் அந்த புளி நன்றாக ஊறிய பின்பு, புளி கரைசலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த புளிகரைசல் அப்படியே இருக்கட்டும். (குழம்புக்கு புளிக் கரைப்பது போல் கரைத்து வைத்துக்கொண்டால் போதும். புளியை மீண்டும் அடுப்பில் வைத்து சமைக்கப் போவது கிடையாது. சுடுதண்ணியில் தான் புளியை ஊற வைக்க வேண்டும். அப்போதுதான் பச்சை வாடை வீசாது).

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். அந்த எண்ணெய் காய்ந்ததும் வர கொத்தமல்லி – 1 டேபிள்ஸ்பூன், பூண்டு தோலுரித்து – 4 பல், சீரகம் – 1 ஸ்பூன், மிளகாய் – 10 லிருந்து 15 காரத்திற்கு ஏற்ப சேர்த்து இந்த எல்லாப் பொருட்களையும் வாசம் வரும் வரை நன்றாக வறுத்து, இதை எண்ணெயில் இருந்து வடித்து ஒரு தட்டில் நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களெல்லாம் ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து, இந்த மசாலா பொடியையும் தனியாக அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக மசாலா வறுத்த கடாயில் எண்ணெய் மீதமிருக்கும். தேவைப்பட்டால் அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அந்த எண்ணெயில் 1/4 கிலோ அளவு கத்தரிக்காய்களை கொஞ்சம் பொடியாக வெட்டி போட்டு நன்றாக வதக்கவேண்டும். வெறும் கத்தரிக்காய்களை எண்ணெயில் வதக்கி வேக வைக்கவேண்டும். கத்திரிக்காய் எண்ணெயில் சிவந்து வெந்து வரவேண்டும்.

- Advertisement -

இரண்டு நிமிடம் போல கத்தரிக்காய்களை எண்ணெயில் நன்றாக வதக்கி விட்டு, அதன் பின்பு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஒரு மூடி போட்டால் கத்திரிக்காய் சீக்கிரமாகவே வெந்துவிடும். கத்தரிக் காயை கரண்டியால் குத்தினால் நசுங்கும் அளவிற்கு நமக்கு பக்குவம் தெரியும் அல்லவா? அதுபோல கத்தரிக்காயையும் வதக்கி வேகவைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு அகலமான பௌலில் முதலில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போடுங்கள். அடுத்தபடியாக வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயை போடுங்கள். இந்த இரண்டையும் நன்றாக மசித்து கலக்கவேண்டும். அதாவது கத்தரிக்காய் மசாலா பொடியோடு ஒருமுறை கலந்து விட்டு, அதன் பின்பு கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை தேவையான அளவு மட்டும் இந்த கத்தரிக்காய் விழுதோடு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்துவிட்டால் கத்திரிக்காய் சட்னி நமக்கு கிடைத்துவிடும்.

நாம் அரைத்த மசாலாவையும் கத்தரிக்காயையும் புளிக்கரைசலை ஊற்றி அப்படியே ஒரு கரண்டியை வைத்து நன்றாக நசுக்கும் போதே இதன் ருசி நாக்கில் எச்சில் ஊற வைக்கும். கரண்டியால் உங்களால் இதை மசிக்க முடியவில்லை என்றால் உங்கள் கையைப் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். தவறு கிடையாது. இறுதியாக பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்தை இதன் மேலே தூவி விட்டு, இதை அப்படியே சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டு பாருங்க அப்பதான் உங்களுக்கு புரியும். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சைட் டிஷ் ஆகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும் என்றால் பாருங்களேன். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -