
செல்வ செழிப்புடன் வாழ்வதற்காக நாம் வணங்க வேண்டிய தெய்வங்களுள் மிகவும் முக்கியமான ஒரு தெய்வமாக திகழக்கூடியவர் குபேர பகவான் என்று நம் அனைவருக்குமே தெரியும். செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி என்றாலும் மகாலட்சுமி நினைத்த உடனே செல்வத்தை நமக்கு வாரி வழங்க இயலாது. குபேர்தான் அந்த செல்வத்திற்கு பாதுகாவலராக திகழ்கிறார் என்பதால் குபேரரின் அருளையும் ஒருசேர நாம் பெற்றால் தான் நம்மால் செல்வ செழிப்புடன் வாழ முடியும். அப்படி குபேரரின் அருளை பெற்று பெறக்கூடிய செல்வத்தை தான் குபேர சம்பத்து என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட குபேர சம்பத்தை பெறுபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் வறுமை என்ற பேச்சிற்கு இடம் இல்லாமல் போகும். இந்த குபேர சம்பத்தை பெறுவதற்கு செய்ய வேண்டிய குபேர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காக்கும் கடவுளாக திகழக்கூடிய பெருமாளுக்கே கடன் கொடுத்தவராக தான் குபேர பகவான் திகழ்கிறார். இன்றளவும் பெருமாள் தான் வாங்கிய கடனுக்கான தொகையை குபேரருக்கு செலுத்திக்கொண்டு இருக்கிறார் என்று புராணங்களில் கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குபேரரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் கடன், வறுமை போன்ற எந்த விதமான எதிர்மறை நிகழ்வுகளும் ஏற்படாமல் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் செல்வ செழிப்புடனும் வாழ முடியும். அப்படிப்பட்ட குபேர பகவானை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக தான் வியாழக்கிழமை திகழ்கிறது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய வியாழக்கிழமையில் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது நமக்கு அதீத பலன் கிடைக்கும் என்று கூறலாம்.
இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் காலை 6:15 மணியிலிருந்து 6:45 மணிக்குள்ளோ அல்லது காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள்ளோ அல்லது அன்று இரவு 8:15 மணியிலிருந்து 8:45 மணிக்குள்ளோ இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். வீட்டில் குபேரர், லட்சுமி குபேரர் போன்றவர்களின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த படத்திற்கு வாசனை மிகுந்த மலர்களை சாற்றி படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் வாசனை மிகுந்த மலர்களை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி மஞ்சள் நிறத்திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் மேற்சொன்ன அந்த குறிப்பிட்ட அரை மணி நேரம் முழுமையாக எரிவது போல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு அரை மணி நேரம் எரிந்தால் போதும். அதை விட கூடுதலாக கூட எரியலாம். ஆனால் குறைவாக எரியக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். குபேரருக்கு அவல் மிகவும் பிடித்தமான ஒரு பொருளாக திகழ்கிறது. அதனால் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அவல், பால் மற்றும் சர்க்கரை அல்லது வெல்லத்தை கலந்து நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். இயன்றவர்கள் பெரிய நெல்லிக்காயை கூட அந்த தீபத்திற்கு முன்பாக நெய்வேத்தியமாக வைக்கலாம்.
பிறகு வாசனை மிகுந்த மலர்களை கையில் வைத்துக்கொண்டு “ஓம் அழகாபுரி அரசே போற்றி” என்னும் மந்திரத்தை 18 முறை கூறி குபேர பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒருவேளை வீட்டில் குபேர பகவானின் படம் இல்லை என்னும் பட்சத்தில் அந்த தீபத்தையே குபேர பகவானாக நினைத்து நாம் இந்த வழிபாட்டை செய்யலாம். வழிபாட்டை செய்து முடித்த பிறகு வாசனை மிகுந்த ஊதுபத்தி சாம்பிராணி தூபங்களை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பிறகு நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் விலக கல் உப்பு பரிகாரம்
இந்த முறையில் குபேர பகவானை புரட்டாசி வியாழக்கிழமை வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்புடன் வாழ்வதற்குரிய குபேர சம்பத்து உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.