
வெயில் காலம் தொடங்கி விட்டது. மாங்காய் சீசனும் தொடங்கி விட்டது. மாங்காய் சீசனில் அனைவரும் வீட்டில் மாங்காய் ஊறுகாய் போடுவது வழக்கம். இந்த முறை நீங்கள் மாங்காய் ஊறுகாய் போடும்போது கீழே குறிப்புட்டுள்ளது போல செய்து பாருங்கள் தயிர் சாதம், சாம்பார் சாதம் இப்படி அனைத்திற்கும் உங்கள் ஊறுகாயின் சுவை தூக்கலாக இருக்கும். சரி வாருங்கள் மாங்காய் ஊறுகாயை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பச்சை மாங்காய் – 1 பெரியது, நல்லெண்ணெய் – 2 கப், சிவப்பு மிளகாய் – 6, உப்பு – தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப, கடுகு – தாளிப்பதற்கு, வெந்தயம் – தேவையான அளவு, பெருங்காயம் – தேவையான அளவு, கருவேப்பிலை – தாளிப்பதற்கு
முதலில் மாங்காயை நன்றாக கழுவ வேண்டும். கழுவிய பிறகு, அந்த மாங்காயை ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும். துடைத்த பிறகு அந்த மாங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். வெட்டிய அந்த துண்டுகளில் உப்பை சேர்த்து கிளறி மூடி வைக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, மூடி வைத்திருந்த மாங்காய் துண்டுகளை திறந்து பார்த்தால், உப்பு நீரானது அடியில் சென்று இருக்கும். மேலாக இருக்கும் மாங்காய் துண்டுகளை தனியாக எடுத்து, அத்துடன் மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். பிறகு வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, அத்துடன் பெருங்காயத்தையும் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மாங்காய் மிளகாய் விழுதை கொட்டி நன்றாக கிளறி விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.
பிறகு இந்தக் கலவையை நன்றாக ஆறவிட்டு, அதில் மீதம் இருக்கும் மாங்காய் துண்டுகளை உப்பு நீர் இல்லாமல் எடுத்து, இந்த கலவையுடன் சேர்க்க வேண்டும். உப்பு தேவைப்பட்டால் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு வெந்தயம் பெருங்காய பொடியை அதில் தூவி விட்டு நன்றாக கிளற வேண்டும்.
இந்த ஊறுகாயை பீங்கான் ஜாடியில் போட்டு வைத்தால், நெடுநாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். கண்ணாடி பாட்டிலையும் உபயோகப்படுத்தலாம். மேலும் இந்த ஊறுகாயை எடுப்பதற்கு மர ஸ்பூன் உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே: வெறும் மூன்று பொருள் இருந்தால் போதும். வீட்டிலேயே இந்த சீம்பால் கடம்பு செய்து விடலாம். அசல் சீம்பால் போலவே இதோட சுவை, சும்மா நச்சுன்னு இருக்கும்.
இது தவிர இந்த ஊறுகாயை நாம் குளிர்சாதன பெட்டியில் வைத்தும் உபயோகப்படுத்தலாம். அவ்வாறு உபயோகப்படுத்தும் போது அது மேலும் சில நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். வினிகர் எதுவும் சேர்க்காமல் இப்படி ஒரு மாங்காய் ஊறுகாயை செய்து, அனைத்து விதமான சாதத்திற்கும் பயன்படுத்தலாம். ஊறுகாய் பிரியர்கள் இதை கட்டாயம் விரும்பி சாப்பிடுவர்.