- Advertisement -
சமையல் குறிப்புகள்

டீக்கடை மசால் வடை செய்முறை

டீ குடிக்கும் பொழுது ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். வீட்டில் அதை செய்து தரச் சொன்னால் கடையில் இருக்கும் அளவிற்கு சுவையாக இருக்காது என்பதால் இந்த ஸ்னாக்ஸை சாப்பிடுவதற்காகவே கடைக்கு சென்று டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அப்படி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் வகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்வதுதான் மசாலா வடை என்ற பருப்பு வடை. இந்த பருப்பு வடையை டீக்கடையை விட மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம்.

மதியம் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகி இருக்கும் என்பதால் பசிக்காகவும் ருசிக்காகவும் வாங்கி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. வேலை நிமிர்த்தமாக வெளியில் செல்பவர்களும் சரி வீட்டில் இருப்பவர்களும் சரி இதற்கு விதிவிலக்கு அல்ல. வீட்டில் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் வீட்டிலேயே மிகவும் சுவையான மசால் வடையை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள முடியும். சரி இப்பொழுது டீக்கடையை விட சுவையாக மொறுமொறுவென்று மசால் வடை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
கிராம்பு – 2
பூண்டு – 5 பல்
இஞ்சி – ஒரு இன்ச்
பட்டை – ஒரு துண்டு
சோம்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

முதலில் கடலை பருப்பில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு நல்ல தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மூன்று மணி நேரம் கழித்து இதில் இருக்கக்கூடிய தண்ணீரை வடித்து ஜல்லடியில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், கிராம்பு, பூண்டு, இஞ்சி, பட்டை, சோம்பு, சீரகம் இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அடுத்ததாக இதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பை சேர்க்க வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு மட்டும் கடலை பருப்பை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதம் இருக்கும் கடலைப்பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

பிறகு அரைத்த இந்த கடலை மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் ஒரு கைப்பிடி அளவு கடலை பருப்பையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், சிறிதாக கிள்ளி போட்ட கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நன்றாக பிணைந்து கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் வடையை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது கையில் எண்ணெய் அல்லது தண்ணீரை தொட்டுக்கொண்டு பிணைந்து வைத்திருக்கும் மாவை சிறு உருண்டையாக உருட்டி பருப்பு வடை போல அமுக்கி எண்ணெய் சூடானதும் அதில் போட வேண்டும்.

ஒருபுறம் நன்றாக சிவந்த பிறகு மறுபுறமும் திருப்பி போட்டு சிவக்க எடுக்க வேண்டும். இவ்வாறு பருப்பை வடையை எண்ணெயில் போடும் பொழுது அடுப்பை குறைத்து வைத்து இருக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மொறு மொறு மசால் வடை தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: எளிமையான காலிஃப்ளவர் கிரேவி செய்முறை
கடைகளில் எந்த எண்ணெய் உபயோகப்படுத்துவார்கள் என்பது நமக்கு தெரியாது. இதை நாமே நம்முடைய வீட்டில் செய்யும் போது எண்ணெயிலும் பருப்பு வகையிலும் ஆரோக்கியமாக நல்லதை மட்டுமே தேர்ந்தெடுத்து செய்வோம் என்பதால் முடிந்த அளவு கடையிலிருந்து எண்ணெய் பொருட்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -