- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவில் வரலாறு

ஆதிபராசக்தி
இத்திருத்தலத்தில் மூலவராக ஆதிபராசக்தி காட்சி தருகின்றாள். இங்கு வீற்றிருக்கும் அம்பாளுக்கு இரண்டு கரங்கள் தான் இருக்கின்றது. பொதுவாக அம்மன் சிலைகளுக்கு நான்கு கரங்களோ, எட்டுக் கரங்களோ இருக்கும். ஆனால் எந்த இடத்தில், அம்பாள் மானுட ரூபத்தில் காட்சி தருகின்றாளோ அந்த இடத்தில் அம்பாளுக்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வழக்கம். மதுரை மீனாட்சி அம்மனுக்கும் இரண்டு கைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிபராசக்தி கோவிலிலும் அம்பாள் நேராக வந்து தரிசனம் தந்ததால், தேவியின் சிலைக்கு இரு கரங்கள் மட்டுமே உள்ளது. அந்த அம்பாளின் சிலைக்கு கீழே சுயம்பு ரூபத்தில் இருக்கும் தேவி காட்சி தருகின்றாள். இந்தக் கோவிலில் கருவறைக்கு உள்ளே சென்று பெண்கள் வழிபடலாம்.

அரிசன பிரிவைச் சேர்ந்த ஒருவர் இந்த கோவிலை கட்ட வேண்டுமென்ற ஆதிபராசக்தியின் ஆணையின்படி இந்த கோவிலானது கட்டப்பட்டது. இதனால் இந்த கோவில் சாதி சமயங்களைக் கடந்த சித்தர்பீடம் எனவும் குறிப்பிடப்படுகிறது. கோவில்களுக்கு உண்டான ஆகம விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது தான் இத்திருத் தலம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

- Advertisement -

தல வரலாறு
ஒரு வேப்ப மரமும், புற்றும் தான் இந்த கோவில் உருவாக காரணமாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாக இந்த வேப்ப மரம் சாய்ந்தது. புற்றும் கரைந்தது. அதன் அடியில் இருந்த அம்பாள் சுயம்பு வடிவமாக தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டாள்.

தன்னைத்தானே அம்மன் வெளிப்படுத்திக் கொண்ட அந்த இடத்தில்தான் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. திரு கோபால நாயக்கர் என்பவர் வேப்பமரம் விழுந்த இடத்தை சுத்தப்படுத்தி சுயம்பு வடிவில் இருக்கும் அம்மனுக்கு கொட்டகை அமைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தார். அந்த கோவில் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்தது. கோவில் கட்டும் பணியானது 1977ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் சித்தர் பீடத்தில் பக்தர்கள், அம்மனிடம் அருள்வாக்கு கேட்பதற்கு ஆரம்பிக்க தொடங்கினர். அதில் கிடைத்த காணிக்கை வைத்துதான் இந்த கோவில் என்று இந்த அளவிற்கு பெரிய அளவில் கட்டப்பட்டது.

- Advertisement -

ஆனால் சுயம்பு வடிவத்தில் இருக்கும் அம்பாளுக்கு உருவம் இல்லை. இதனால் பக்தர்களுக்கு கண்கண்ட தெய்வமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்பாளிடம் வைத்து, சிலை அமைத்துத் தரும்படி அருள் வாக்கு கேட்டனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அம்பாள் சிலையை வடிப்பதற்கு உத்தரவிட்டாள். அதன்படி சிலை அமைக்கப்பட்டு அதில் இன்றளவும் குடிகொண்டிருக்கும் அம்பாள் தன் பக்தர்களுக்கு அருள் பாவித்துக் கொண்டிருக்கின்றாள்.

பலன்கள்
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். குறிப்பாக பெண் பக்தர்களின் வருகை இந்த கோவிலுக்கு அதிகமாகவே இருக்கும். சிவப்பு துணி அணிந்து வருபவர்களுக்கு அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பில்லி சூனியம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் விடுபட அதர்வண பத்ரகாளி கோவில் இங்கு சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

செல்லும் வழி
சென்னையிலிருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 92 கிலோ மீட்டர் தொலைவில் மேல்மருவத்தூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்:
காலை 06.00AM – 12.00PM
மாலை 05.00PM – 09.00PM

முகவரி:
அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவில்,
மேல்மருவத்தூர்,
காஞ்சிபுரம்.

தொலைபேசி:
+91-44-27529217.

இதையும் படிக்கலாமே
எதையெல்லாம் பின்பற்றினால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Melmaruvathur temple timings. Melmaruvathur adhiparasakthi temple history Tamil. Melmaruvathur adhiparasakthi temple in Tamil. Melmaruvathur adhiparasakthi kovil varalaru.

- Advertisement -