- Advertisement -
சமையல் குறிப்புகள்

முருங்கைக்கீரை குழம்பு என்றால் இதுதாங்க. கிராமத்து சுவையில் பாரம்பரியமான முருங்கைக்கீரை குழம்பு ரெசிபி உங்களுக்காக.

- Advertisement -

முருங்கைக் கீரையை வைத்து முருங்கைக் கீரை கடையல், முருங்கைக்கீரை சாம்பார், பொரியல், என்று விதவிதமாக செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். ஒருமுறை முருங்கைக்கீரையில் இப்படி குழம்பு வைத்து சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அற்புதமான ருசி. சொல்லும்போதே மணக்க மணக்க வாசம் வீசுது. சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை தெரிந்து கொள்வோமா.

முதலில் முருங்கைக் கீரையை எடுத்து நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு அலசி தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தாராளமா 2 கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை அலசி இந்த குழம்புக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 50 கிராம் அளவு துவரம்பருப்பை குக்கரில் போட்டு மஞ்சள் தூள் பெருங்காயம் போட்டு நன்றாக குழைவாக வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், இரண்டாக கிள்ளிய வரமிளகாய் – 3, பூண்டுப் பல் தோல் உரித்தது – 15, கருவேப்பிலை – 1 கொத்து, சின்ன வெங்காயம் தோலுரித்து – 10 பல், இந்த பொருட்களை சேர்த்து முதலில் வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

அடுத்தபடியாக நறுக்கிய தக்காளி பழங்கள் – 2 சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி, சேர்த்து நன்றாக தக்காளி பழத்தை வதக்கி விடுங்கள். தக்காளி வதங்கியவுடன் குழம்பு மிளகாய் தூள் அல்லது சாம்பார் தூள் – 1 ஸ்பூன் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் போல வதக்கி, 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி, இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். நாம் தாளித்து இருக்கும் பூண்டுப்பல் நன்றாக வேகட்டும். அதன்பின்பு வேகவைத்த பருப்பையும் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும் பருப்பு ஒரு கொதி வரட்டும்.

- Advertisement -

பருப்பு கொதித்து வந்தவுடன் தயாராக எடித்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை பருப்பில் போட்டு நன்றாக கலந்து விடுங்கள். முருங்கைக்கீரை இரண்டு நிமிடம் போல நன்றாக கொதித்து வந்தவுடன் சிறிய துண்டு புளியை எடுத்து சிறு சிறு துண்டுகளாக கிள்ளி இந்த கீரை குழம்பில் போட்டு, மீண்டும் ஒருமுறை கலந்து கொதிக்க விடுங்கள். கூடுமானவரை இரண்டிலிருந்து மூன்று நிமிடம் முருங்கைக்கீரை தளதளவென கொதித்து வெந்தால் போதும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.

சுடச்சுட இருக்கும் இந்த முருங்கைக்கீரையை அப்படியே ஒரு மண் சட்டைக்கு மாற்றி, தேவைப்பட்டால் உப்பு போட்டு நன்றாக மசிய கடைந்து கொள்ள வேண்டும். இந்த கீரையைக் கடைவதில் தான் சில பேருக்கு சிக்கல். அனுபவம் உள்ளவர்கள் நன்றாக மசிய சீக்கிரத்தில் கடந்து விடுவார்கள். அனுபவம் இல்லாதவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம். பழகிவிட்டால் சுலபமாக வந்துவிடும். அது ஒன்றும் பிரச்சினையில்லை. நாம் சேர்த்திருக்கும் பூண்டு வெங்காயம் தக்காளி மிளகாய் கீரை அனைத்தும் ஒன்று சேர்ந்து மசிந்து கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் ஒரு கீரை குழம்பு நமக்கு கிடைக்கும். அவ்வளவு தான். இறுதியாக 1 ஸ்பூன் நல்லெண்ணெய்யில் வெங்காய வடகம் தாளித்து கொட்டிக் கலந்து சுடச்சுட சாதத்தில் போட்டு என்ஜாய் பண்ணுங்க.

- Advertisement -