
தங்க நகை என்பது ஒவ்வொருவரின் கனவாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக பெண்களின் கனவாக இருக்கும். ஒரு குழந்தை பிறந்தது முதல் இறக்கும் தருவாய் வரை பல நேரங்களில் தங்க நகைகள் அவருடன் பின்னிப்பிணைந்து இருக்கக்கூடிய ஒரு பந்தமாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட தங்க நகைகளை வாங்கி சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து பெண்களுக்கும் இருக்கும். அப்படி வாங்கி சேர்க்கக்கூடிய தங்க நகைகளை ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவர்களின் அவசரத்திற்காக அடமானத்தில் வைக்க வேண்டிய நிலையும் ஏற்படும். அப்படி அடமானத்தில் வைத்த நகையை திருப்ப வேண்டும் என்று முயற்சி செய்யும் பொழுது பலருக்கும் அந்த முயற்சி பலனற்றே போகிறது. அப்படி எவ்வளவு முயற்சி செய்தும் அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகைகளை திருப்ப இயலவில்லை என்பவர்கள் எந்த மரத்தை வழிபாடு செய்தால் விரைவிலேயே திருப்ப முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
தங்க நகைகள் நமக்கு சேர வேண்டும் என்றால் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். குரு அம்சம் பொருந்திய ஒரு உலோகமாக தான் தங்கம் திகழ்கிறது. அந்த வகையில் இந்த உலகத்தை படைத்து காத்து அழிக்கக்கூடிய தெய்வங்களாக திகழக்கூடியவர்கள் தான் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன். இவர்கள் மூவரையும் தன்னகத்தே கொண்ட ஒரு தெய்வமாக திகழ்ந்தவர் தான் தத்தாத்ரேயர். இவர் தான் அனைவருக்கும் குருவாக திகழக்கூடியவர். இவரை நாம் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்யும் பொழுது குரு அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இவரை பல ஆலயங்களில் நம்மால் தரிசிக்க முடியாது. அதனால் இவரின் அம்சம் பொருந்திய ஒரு மரத்தை நாம் வழிபாடு செய்தாலே இவருடைய அருளை பெற முடியும். இவரின் அம்சம் பொருந்திய மரமாக திகழ்வதுதான் அத்திமரம். அத்தி மரத்தின் அடியில் இவர் வீற்றிருக்கிறார் என்று புராணங்கள் கூறப்படுகின்றன. அப்படிப்பட்ட அத்தி மரத்தை வியாழக்கிழமை அன்று நாம் வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கிழமை அன்று காலை 5:30 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் இந்த வழிபாட்டை நாம் நிறைவு செய்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில் அருகில் எந்த இடத்தில் அத்திமரம் இருக்கிறதோ அந்த இடத்திற்கு ஒரு செம்பு அல்லது பித்தளை சொம்பை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப தண்ணீர் இருப்பது போல் ஒரு பாட்டிலில் ஊற்றி அந்த தண்ணீரின் நிறம் நல்ல மஞ்சளாக மாறும் வரை மஞ்சள் தூளை கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் இரண்டு நெய் தீபம் ஏற்றுவதற்கு தேவையான பொருட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிற மலர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் நாம் அணியக்கூடிய ஆடையில் சிறிதளவாவது மஞ்சள் நிறம் இருப்பது போல் பார்த்துக் கொள்வது மிகவும் சிறப்பு.
முதலில் அத்திமரம் இருக்கும் இடத்திற்கு சென்று பாட்டிலில் இருக்கக்கூடிய தண்ணீரை சொம்பில் ஊற்றி சொம்பிலிருந்து அத்தி மரத்திற்கு ஊற்ற வேண்டும். பிறகு மஞ்சள் நிற மலர்களை அந்த மரத்திற்கு சமர்ப்பணம் செய்து விட்டு, இரண்டு அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்றி முழுமனதோடு தாத்தோத்திரியாரை மனதார நினைத்துக் கொண்டு அந்த அத்தி மரத்தை 108 முறை வலம் வர வேண்டும். இப்படி ஒவ்வொரு வியாழக்கிழமையும் தொடர்ச்சியாக 16 வியாழக்கிழமை செய்பவர்களுக்கு குரு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகைகள் வீடு திரும்பும் மேலும் புதிதாக தங்க நகைகள் வாங்குவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தேடி வர கால பைரவர் வழிபாடு
சக்தி வாய்ந்த இந்த விருட்ச வழிபாட்டை முழுமனதோடும் முழு நம்பிக்கையோடும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் செய்பவர்களுக்கு குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று தங்க நகைகள் சேரும் யோகம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.