நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நமக்கு நன்மைகளை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவரான திகழக் கூடியவர் தான் காலபைரவர். போன ஜென்மங்களில் நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றார் போல் தான் இந்த ஜென்மத்தில் பிறப்பெடுத்து கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம். அப்படி நம்முடைய கர்ம வினைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் கால பைரவரை சரணாகதி அடைந்து வழிபாடு செய்ய விரைவிலேயே கர்மவினைகள் தீந்து நன்மைகள் உண்டாகும். கெட்ட காலமும் நல்ல காலமாக மாறும். அப்படிப்பட்ட கால பைரவரை எந்த நேரத்தில் தீபம் ஏற்றி எப்படி வழிபட்டால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கால பைரவர் வழிபாடு
கால பைரவரை பலரும் அஷ்டமி திதி அன்று தான் வழிபாடு செய்வார்கள். அதிலும் குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளும், கஷ்டங்களும் தீர்ந்து போகும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட தேய்பிறை அஷ்டமி அன்று ஒரு சில சூட்சமமான வழிமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய துரதிஷ்டம் அனைத்தும் முற்றிலும் நீங்கி அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். அப்படிப்பட்ட ஒரு சூட்சுமமான வழிபாட்டை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை ஜூன் மாதம் 19ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். பொதுவாகவே கால பைரவருக்கு இருள் சூழ்ந்த நேரம் தான் மிகவும் விசேஷமான நேரமாக கருதப்படுகிறது. அதேபோல் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடு என்பது நமக்கு ஆயிரம் மடங்கு பலனை தரும் என்றே கூறலாம். அதனால் கால பைரவரை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்யும்பொழுது இரட்டிப்பு பலன் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் ஜூன் மாதம் 19ஆம் தேதி காலை 3 மணியிலிருந்து 4:30 மணிக்குள் கால பைரவரை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
அந்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வீட்டில் காலபைரவரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து அலங்காரம் செய்து கொள்ளலாம். பிறகு அவரின் படத்திற்கு முன்பாக மூன்று அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு ஏதாவது ஒரு இனிப்பு வகைகளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் அல்லது பாலை காய்ச்சி கற்கண்டு போட்டு நெய்வேத்தியமாக வைக்கலாம். அந்த நேரத்தில் இவை எதுவுமே செய்ய முடியாது என்பவர்கள் சுத்தமான டம்ளரில் எச்சில் படாத தண்ணீரை பிடித்து வைக்கலாம்.
இப்படி வைத்துவிட்டு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கால பைரவரின் இந்த ஒரு மந்திரத்தை 54 முறை கூற வேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த முறையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கால பைரவருக்குரிய அஷ்டமி திதியில் காலபைரவரின் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கர்ம வினைகளும் துரதிஷ்டமும் நீங்கி அதிர்ஷ்டம் அவர்களை தேடி வர ஆரம்பிக்கும்.
மந்திரம்
“ஓம் காலகாலாய வித்மஹே காலாஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ பிரச்சோதயாத்”
இதையும் படிக்கலாமே: பண மழையை கொட்டி தரும் பிள்ளையார் வழிபாடு
நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகளும், துரதிஷ்டமும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முழு மனதோடு காலபைரவரை நினைத்து இந்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அவரின் அருளால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.