- Advertisement -
- Advertisement -

தெய்வீக சக்தி மிகுந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் பௌர்ணமி நாள். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் வைகாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது ஜூன் மாதம் பத்தாம் தேதி பகல் 12:27 மணிக்கு தொடங்கி ஜூன் மாதம் 11-ம் தேதி பகல் 1:53 வரை இருக்கிறது. செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி நாளில் நாம் செய்யக்கூடிய இந்த எளிமையான பூஜை நம் வாழ்வில் இருக்கும் கஷ்டத்தை நீக்கி நன்மைகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். அந்த பூஜையை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நன்மைகளை தரும் பூஜை

பொதுவாக பௌர்ணமி நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் அந்த பூஜைக்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்றே கூற வேண்டும். பௌர்ணமி நாளில் இந்த தெய்வத்தை தான் வழிபாடு செய்ய வேண்டும், இந்த தெய்வத்தை வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் என்று எதுவுமே கிடையாது. எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் பௌர்ணமி தினத்தில் நாம் வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக குலதெய்வ வழிபாடு மற்றும் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. இருப்பினும் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் நம்முடைய இஷ்ட தெய்வத்தையோ அல்லது குலதெய்வத்தையோ முழு மனதோடு ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் நாம் பூஜை செய்து வழிபாடு செய்தோம் என்றால் அவர்களின் அருளால் நம் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

- Advertisement -

வைகாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி அன்று நாம் பூஜை செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது மாலை ஐந்து முப்பது மணியிலிருந்து ஒன்பது முப்பது மணிக்குள். ஜூன் மாதம் பத்தாம் தேதி இந்த நேரத்தில் பூஜை செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஒருவேளை அந்த நேரம் பூஜை செய்ய இயலாது என்பவர்கள் ஜூன் மாதம் 11ஆம் தேதி காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் 4 மணியிலிருந்து 5 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். இந்த இரண்டு நேரத்தில் எந்த நேரம் தங்களுடைய வசதிக்கு உகந்ததாக இருக்கிறதோ அந்த நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்கள் அனைத்திற்கும் பூக்களை சாற்றி எப்பொழுதும் ஏற்றக்கூடிய தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அந்த தீபங்களை தவிர்த்து ஒரு தாம்பாள தட்டில் 5 அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இது பௌர்ணமிக்குரிய தீபமாக கருதப்படுகிறது. இதில் பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் தீபம் ஏற்றினால் கூடுதல் சிறப்பு தரும். தாங்கள் எந்த தெய்வத்தை பூஜை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த தெய்வத்தின் படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு வாசனை மிகுந்த மலர்களை கையில் வைத்துக்கொண்டு அந்த தெய்வத்தின் பெயரை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். உதாரணமாக மாரியம்மனை வழிபட போகிறீர்கள் என்றால் “ஓம் நமோ மாரியம்மனே நமஹ” என்று கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பெருமாளை வழிபாடு செய்வதாக இருந்தால் “ஓம் நமோ நாராயணாய நமஹ” என்று அர்ச்சனை செய்ய வேண்டும். முருகரை வழிபாடு செய்ய வேண்டும் என்றால் “ஓம் நமோ ஷண்முகாய நமஹ” என்று அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி 108 முறை வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்த பிறகு கற்பூர தீப தூபம் காட்ட வேண்டும். இவ்வாறு கற்பூர தீப தூபம் காட்டும் பொழுது சந்திரனுக்கும் காட்ட வேண்டும். இப்படி காட்டி முடித்துவிட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:நவதானிய மாவிளக்கு பலன்கள்

முழு நிலவு வானத்தில் இருக்கக்கூடிய இந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்தி நாம் செய்யக்கூடிய பௌர்ணமி பூஜையை நம் வாழ்வில் பலவிதமான மாற்றங்களை உண்டாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. முழு மனதோடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -