
சுவாதி நட்சத்திர நாளில் அவதரித்தவராக நரசிம்மர் திகழ்கிறார். அதுவும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய சுவாதி நட்சத்திரத்தில் தான் நரசிம்மர் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தை நாம் நரசிம்ம ஜெயந்தி என்று கோலாகலமாக கொண்டாடுகிறோம். நரசிம்மரை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த நரசிம்மர் அவதரித்த நாளன்று வீட்டில் எளிமையான முறையில் எப்படி வழிபாடு செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
உக்கிர தெய்வங்களின் வரிசையில் முதன்மையானவராக திகழக்கூடியவர்தான் நரசிம்மர். அப்படிப்பட்ட நரசிம்மர் அவதரிப்பதற்கு காரணமாக திகழ்ந்தது உண்மையான அன்பு மற்றும் பக்தியும்தான். உண்மையான அன்பையும் பக்தியையும் யார் ஒருவர் நரசிம்மர் மீது செலுத்துகிறார்களோ அவர்களுடைய கஷ்ட காலத்தில் நரசிம்மர் அவர்கள் உடனேயே வந்து இருந்து கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பார். நாளை என்ற சொல்லுக்கு இடம் தராதவராக திகழக்கூடியவர்தான் நரசிம்மர் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட நரசிம்மருக்குரிய ஜெயந்தி நாள் அன்று வழிபாடு செய்யும் முறை.
அருகில் நரசிம்மரின் ஆலயம் இருக்கும் பட்சத்தில் மே மாதம் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று நரசிம்மருக்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு அவரை வழிபாடு செய்யலாம். அருகில் நரசிம்மரின் ஆலயம் இல்லை என்பவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாட்டை செய்யலாம்.
வீட்டு பூஜை அறையில் ஒரு மனைப்பலகையை வைத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து அதில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் நரசிம்மரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை மனை பலகையின் மீது வைக்கலாம். படம் வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் இல்லை என்று நினைப்பவர்கள் ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி தாமரைதண்டு திரி போட்டு தீபமேற்றி அந்த தீபத்தில் நரசிம்மர் வீற்றிருப்பதாக நினைத்து வழிபாட்டை செய்யலாம்.
நரசிம்மருக்கு மிகவும் பிடித்தமானதாக திகழக்கூடியது பானகம் மற்றும் நீர்மோர். இவை இரண்டையுமே நெய்வேத்தியமாக வைக்கலாம் அல்லது ஏதாவது ஒன்றையாவது நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு நரசிம்மருடைய மந்திரமான “ஓம் நமோ நரசிம்மரே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி துளசி இலைகளால் தீபத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நரசிம்மருக்குரிய பாடலான பின்வரும் இந்த பாடலை முழு மனதோடு மூன்று முறை கூற வேண்டும். அப்படி கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு பிரசாதமாக வைத்த பானகம் நீர் மோரை குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது தர வேண்டும். வீட்டில் இருப்பவர்களையோ அல்லது அருகில் இருப்பவர்களையோ கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு தருவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது
“பக்தி அற்றவர்களால் அடைய முடியாதவனே,
தாயின் வயிற்றில் பிறந்தால் தாமதமாகும் என்று தூணில் இருந்து பிறந்தவனே
நினைத்த மாத்திரத்தில் பிரச்சினையை தீர்ப்பவனே லட்சுமி நரசிம்மரே
உன் தெய்வத்திருவடிகளுக்கு சரணம் சரணம் சரணம்”
இதையும் படிக்கலாமே:கோடி மடங்கு பலனை தரும் சிவ நாமம்
நரசிம்மர் அவதரித்த தினத்தன்று இந்த எளிமையான பாடலை முழுமனதோடு நரசிம்மரை நினைத்துக் கொண்டு கூறுபவர்களுக்கு நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.