
நாம் ஒவ்வொருவரும் அனுதினமும் அனுபவிக்க கூடிய நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் காரணமாக திகழ்பவர்கள் நவகிரகங்கள் தான். ஒருவர் பிறக்கும் பொழுதே அவர் பிறந்த நேரத்தில் நவகிரகங்களின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்க முடியும். அதனால் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நவகிரகங்கள் என்பவர்கள் மிகவும் முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இதில் சுப கிரகங்கள் அசுப கிரகங்கள் என்று இருக்கின்றன. சுப கிரகங்கள் நன்மைகளையும், அசுப கிரகங்கள் தீமைகளையும் தடைகளையும் தருபவை. இப்படி தீமைகளையும் தடைகளையும் தருவதன் மூலம் நாம் அளவில்லாத கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அந்த கஷ்டங்களை நீக்குவதற்கும் அனைத்து கிரகங்களின் அருளைப் பெறுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
நவகிரகங்களின் தலைவனாக திகழக்கூடியவர்தான் முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான். விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நவகிரகங்களின் அருளையும் நம்மால் பெற முடியும் என்பதால் தான் நம்முடைய முன்னோர்கள் தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படி அனுதினம் வழிபாடு செய்தும் ஒரு சிலருக்கு அதிகப்படியான தடைகளும் கஷ்டங்களும் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்துடன் சேர்ந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இதற்கு நமக்கு ஒரு மண் சட்டி வேண்டும். அதில் சாணம் மற்றும் மண்ணை கலந்து அதில் நிரப்பி அதற்கு மேல் நவ தானியங்களை தூவி முளைப்பாரி வளர்ப்பது போல் வளர்க்க வேண்டும். முதல் நாள் சூரிய பகவானை மனதார நினைத்து “ஓம் சூரிய பகவானே போற்றி” என்று கூறி அந்த நவதானியங்களின் மேல் தண்ணீரை தெளிக்க வேண்டும். மறுநாள் சந்திர பகவானை நினைத்து செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகங்களின் பெயரை கூறி மனதார வழிபாடு செய்து தண்ணீர் தெளித்து முளைப்பாறியை வளர்க்க வேண்டும். ஒன்பது நாட்கள் நவகிரகங்களின் பெயரை கூறி தண்ணீர் ஊற்றி இருப்போம். அதற்குப் பிறகு தொடர்ந்து 11 நாட்கள் இதை நாம் முழுமனதோடு நவகிரகங்களை நினைத்து வழிபாடு செய்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
21 நாட்கள் நம்முடைய வீட்டில் இந்த முளைப்பாரியானது வளர்ந்து இருக்கும். பிறகு இதை அப்படியே எடுத்துக்கொண்டு போய் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்தில் வைத்து நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தடைகள் அனைத்தும் விலக வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொண்டு மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு இந்த முளைப்பாரியை ஓடுகின்ற தண்ணீரிலோ நீர்நிலைகளிலோ போட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கிரக தோஷங்களும் தடைகளும் நீங்கும். நவகிரகங்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: பொருளாதார முன்னேற்றம் உண்டாக பரிகாரம்
முழு நம்பிக்கையோடு நவகிரகங்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்தி இந்த ஒரு வழிபாட்டை செய்பவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் நிச்சயம் நவகிரகங்களின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.