
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விழாக்களில் ஒன்றாக கருதுவது தான் நவராத்திரி திருவிழா. அந்த வகையில் நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு விதமாக வழிபாடு செய்து ஒவ்வொரு விதமான பலனை பெறுவோம். அதன் அடிப்படையில் நவராத்திரியின் நான்காம் நாள் வீட்டில் எந்த முறையில் வழிபட்டால் கடன் பிரச்சினை தீரும் என்றும் செல்வ வளம் அதிகரிக்கும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரி சமயத்தில் வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் ஆக இருந்தாலும், கலசம் வைத்திருப்பவர்களாக இருந்தாலும், அணையா தீபம் வைத்திருப்பவர்களாக இருந்தாலும் அல்லது எதுவுமே செய்யாமல் வழிபாடு மட்டும் செய்கிறோம் என்பவர்களாக இருந்தாலும் இந்த முறையில் ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய நவராத்திரி வழிபாட்டின் முழு பலனையும் பெற முடியும். அந்த வகையில் நவராத்திரியின் நான்காம் நாள் செய்யவேண்டிய வழிபாட்டு முறை
நவராத்திரியின் நான்காம் நாள் அம்பிகையை லட்சுமி ஆக வழிபாடு செய்ய வேண்டும். நவ துர்க்கைகளில் கூஷ்மாண்டா துர்கையாக வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 7:45 முதல் 8:45க்குள் செய்யலாம் அல்லது 10:45 முதல் 11:45 குள் செய்யலாம் அல்லது மாலை 5:30 மணியில் இருந்து 10:30 மணி வரை செய்யலாம். அன்றைய தினம் நாம் அணிய வேண்டிய உடையின் நிறம் கருநீலமாக இருக்க வேண்டும்.
அம்பிகைக்கு நெய்வேத்தியமாக பச்சைப்பயிறு சுண்டல், பட்டாணி சுண்டல், அவல் கேசரி இவை மூன்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பான முறையில் வைக்க வேண்டும். மற்ற வகையில் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு வேறு பிரசாதங்களை கூட நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளலாம். அன்றைய தினத்தில் அம்பிகையை வழிபாடு செய்வதற்கு ஜாதிமல்லி பூவை பயன்படுத்த வேண்டும். அர்ச்சனைக்காக நெல்லி இலைகளை பயன்படுத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் 3, 7, 9 என்ற எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைக்க வேண்டும். அவர்களை பூஜையில் கலந்து கொள்ள சொல்லி அவர்களுக்கு பிரசாதங்களை தந்து நிறைவாக வழி அனுப்ப வேண்டும்.
அன்றைய தினத்தில் அம்பிகைக்கு வைத்து வழிபட வேண்டிய பழமாக திகழ்வது கொய்யாப்பழம். மேலும் இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் மூன்று நெய் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த மூன்று நெய் தீபங்களில் ஒன்று வடக்கு பார்த்தவாரும், ஒன்று கிழக்கு பார்த்தவாரும், ஒன்று மேற்கு பார்த்தவாரும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோடு மட்டுமல்லாமல் நவராத்திரியின் நான்காம் நாள் அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு தங்களால் இயன்ற உணவுப் பொருட்களை தானமாக தந்து பசுவின் பின்புறத்தை தொட்டு வணங்கி விட்டு வருவது என்பது கடன் பிரச்சினையை தீர்க்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பிறருக்கு அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் 108 முறை மகாலட்சுமி தாயாரின் மந்திரத்தை கூற வேண்டும். அதேபோல் மகாலட்சுமி தாயாருக்குரிய பாடல்களையும், ஸ்லோகங்களையும், அஷ்டகத்தையும், ஸ்தோத்திரத்தையும் கூறுவது என்பது சிறப்பு.
மந்திரம்
ஓம் க்லீம் மகாலட்சுமியே போற்றி ஓம்
இதையும் படிக்கலாமே:புரட்டாசி சதுர்த்தி திதி வழிபாடு
நவராத்திரியின் நான்காம் நாள் அம்பிகையை லட்சுமியாக பாவித்து இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை தீர்வதோடு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.