- Advertisement -
- Advertisement -

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான ஒரு நிகழ்வாக கருதப்படுவது தான் நவராத்திரி. இந்த நவராத்திரி என்பது அமாவாசை முடிந்த மறுநாள் தொடங்கும். பலரும் இந்த நவராத்திரி தினத்தில் வீட்டில் படிக்கட்டுகளை அமைத்து கொலு வைத்து சிறப்பான வழிபாடுகளை செய்வார்கள். ஒரு சிலர் கலசம் மட்டும் வைத்து வழிபாடு செய்வதும் உண்டு. இதே முறைப்படி தான் பல கோவில்களிலும் கொலுவைத்து வழிபாடு செய்வார்கள். அந்த முறையில் கொலு வைத்து வழிபாடு செய்ய இயலாதவர்களும் கலசம் வைக்க வழியில்லாதவர்களும் செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நவராத்திரி தீப வழிபாடு

வருடா வருடம் வரக்கூடிய எந்த ஒரு விசேஷமான நாளாக இருந்தாலும் அந்த நாளில் வீடு திருவிழா போல் காட்சி அளிக்கும். அந்த வகையில் பலரது இல்லங்களிலும் நவராத்திரி கொலுவைத்து வழிபாடு செய்வது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்க்கை, லஷ்மி, சரஸ்வதி என்ற இந்த முப்பெருந்தேவியரை வழிபாடு செய்வது உண்டு. கொலு வைத்தோ அல்லது கலசம் வைத்தோ வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்ற நியதி இருக்கிறது. நடுவில் எதற்காகவும் அதை நிறுத்தக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அதனால் புதிதாக கொலு வைக்க வேண்டும் கலசம் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் கொலு வைக்க முடியுமா கலசம் வைக்க முடியுமா என்பதை யோசித்து பிறகு தான் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் கொலு வைத்து வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் பழைய பொம்மைகளுடன் புதிதாக பொம்மை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொலு கலசம் வைத்து வழிபாடு செய்பவர்கள் அந்த வழிபாடு சமயத்தில் அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு தங்களால் இயன்ற பொருட்களை பிரசாதமாக தந்து அனுப்ப வேண்டும் என்பதும் பலரும் பின்பற்றும் வழிமுறையாக கருதப்படுகிறது. எளிமையான முறையில் வெற்றிலை பாக்கு பூ வாழைப்பழம் இவற்றையாவது தரவேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.

இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இப்படி வரக்கூடிய சுமங்கலி பெண்களின் வாயிலாக துர்க்கை, லஷ்மி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரும் வீட்டிற்குள் வருவார்கள் என்றும் நம்முடைய நவராத்திரி பூஜையில் அவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தங்களால் இயன்ற அளவிற்கு தானங்களை தர வேண்டும் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் செய்ய ஆசையாக இருந்தாலும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் நவராத்திரி சமயத்தில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த தீபத்தை நவராத்திரி தொடங்கும் அன்று காலையில் ஏற்ற வேண்டும். ஒரு சிலர் முதல் நாள் அதாவது அமாவாசை தினத்தன்று மாலையிலேயே ஏற்றி வைத்து விடுவார்கள். இதற்கு வீட்டு பூஜை அறையில் ஒரு மனைப்பலகையை போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் சிவப்பு நிற துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அந்த துணிக்கு மேல் ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் பச்சரிசியை பரப்பிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு மேல் பெரிய அகலமான அகல் விளக்கு ஒன்றை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்கில் சற்று கனமான திரியாக பார்த்து திரியைப் போட்டு வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவோமோ அந்த எண்ணையை ஊற்றி தீபம் ஏற்றலாம். சிறப்பான பலனை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

இப்படி ஏற்றக்கூடிய இந்த தீபமானது தொடர்ச்சியாக ஒன்பது நாட்களும் இடைவிடாமல் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். இதை தான் அணையா தீபம் என்று கூறுவோம். தீபத்தில் லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை என்று முப்பெரும் தேவியர் வீற்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அந்த தீபத்தின் அடிப்பகுதியில் துர்க்கையும், நடுவில் லட்சுமியும், நுனியில் சரஸ்வதி தேவியும் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தொடர்ச்சியாக இந்த தீபம் வீட்டில் எரிந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அந்த தீபத்தின் வாயிலாக நம்முடைய வீட்டில் முப்பெரும் தேவியர்களும் வீற்றிருப்பார்கள் என்று பொருள்படுகிறது. நாம் செய்யக்கூடிய வழிபாட்டையும், நெய்வேத்தியத்தையும், அம்மனுக்குரிய போற்றிகளையும் இந்த விளக்கை பார்த்து செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:குரு பகவான் கொண்டைக்கடலை மாலை பலன்கள்

இந்த அணையா தீபம் யார் ஒருவர் வீட்டில் தொடர்ச்சியாக ஒன்பது நாட்களும் எரிந்து கொண்டே இருக்கிறதோ அவர்களுடைய வீட்டில் துர்க்கை அம்மன், மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதன் மூலம் நவராத்திரி வழிபாட்டின் முழு பலனையும் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -