
எடுத்த காரியத்தை தடை இல்லாமல் முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஒரு வீடு கட்ட போகிறோம் என்றால் கூட, கட்டி முடிப்பதற்குள் பல தடைகளை சந்தித்து விடுவோம். தடைகளை தாண்டிய வெற்றி தான் நிலைத்து நிற்கவும் செய்கிறது. எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அவற்றை தவிடுபடியாக்கி நினைத்ததை முடிக்க செய்யும் எளிய ஒரு பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து காண இருக்கிறோம்.
ஒரு நல்ல விஷயத்திற்காக, நம் உழைப்பை மற்றும் நம்பிக்கையை போட்டு வெற்றியை நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இறையருள் கட்டாயம் தேவை. இந்த இறையருளை எளிதாக ஈர்த்து தரக்கூடியது பரிகாரங்கள். நாம் என்ன செய்ய போகிறோம்? என்பதை விட நம்முடைய நம்பிக்கையின் அளவு என்ன? என்பது தான் வெற்றியை தேடி தரும்.
காரிய வெற்றிக்கு வெல்லத்தினை பிள்ளையாராக பிடித்து வைக்க வேண்டும். கொஞ்சம் வெல்லத்தினை இடித்து கெட்டியாக கரைத்து பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் பிள்ளையாரை ஆவாகனம் செய்துவிட்டு, ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவிலான காட்டன் துணியை கத்தரித்து அதில் மஞ்சள் தோய்த்து காய வைத்தும் எடுக்கலாம். இந்தத் துணியில் நான்கைந்து குறு மிளகுகளை போட்டுக் கொள்ளுங்கள். மிளகு கடன் தொல்லைகளைப் போக்கும் அற்புத பொருளாக இருக்கிறது. பைரவரை வணங்கி மிளகு சாற்றினால் எப்பேர்ப்பட்ட கடனும் தீரும் என்பது நம்பிக்கையாக இன்று வரையிலும் இருந்து வருகிறது.
அது போலவே குறுமிளகினை எடுத்து மஞ்சள் துணியில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரம் நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரம் குபேர அருள் தரும் பொருள். பின் ரெண்டு கிராம்புகளை போட்டுக் கொள்ளுங்கள். கிராம்பு மஹாலக்ஷ்மி அருள் தரும் பொருள். இப்போது இதை ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். பின்பு இதை பூஜை அறையில் வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.
பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை 3 முறை உச்சரித்து மனதார இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எடுத்த காரியம் தடைகள் இல்லாமல் முடிவுற வேண்டும், நினைத்தது நினைத்தபடி நடக்க வேண்டும், எதிர்பார்த்தவை கைக்கூட வர வேண்டும் என்று மனதார உங்கள் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களாக வைக்க வேண்டும். 48 நாட்களுக்கு தொடர்ந்து வெல்லத்தினை பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.
மந்திரம்:
மூஷிக வாகன மோதக ஹஸ்த,
சாமர கர்ண விளம்பித சூத்ர,
வாமன ரூப மஹேஸ்வர புத்ர,
விக்ன விநாயக பாத நமஸ்தே!!!
இதையும் படிக்கலாமே:
நல்ல வேலை கிடைக்க துர்கை வழிபாடு
இந்த தெய்வீக சக்தி வாய்ந்த முடிச்சினை தொடர்ந்து 48 நாட்களுக்கு பூஜை அறையில் வைத்து நீங்கள் பூஜை செய்ய வேண்டும். தினமும் தூபம் மட்டும் காண்பியுங்கள் போதும். இவ்வாறு செய்து வர எண்ணியது எண்ணியபடி நடந்து விடும் என்பது நம்பிக்கை. உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறிய பிறகு, 48 நாட்கள் முடிந்த நிலையில் இம்முடிச்சினை அவிழ்த்து, ஓடும் நீரில் விட்டு விடுங்கள். எப்பேர்பட்ட வேண்டுதல்களும் தடை இல்லாமல் வெற்றி அடையும் அற்புத பரிகாரமாக இப்பரிகாரம் நிச்சயம் இருக்கும்.