
இன்றைய காலத்தில் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நன்மை தரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நம்முடைய பாரம்பரியத்தில் அரிசியே அதி முக்கியமான உணவுப் பொருளாக திகழ்கிறது. இதற்கு மாற்றாக அரிசி சேர்க்காமல் பச்சைப் பயிரை சேர்த்து இட்லி செய்து தருவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பச்சை பயிரை வைத்து எப்படி இட்லி செய்வது என்று பார்ப்போம்.
பச்சை பயிரில் புரோட்டின், கார்போஹைட்ரேட், பைபர் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. பச்சை பயிரை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ரத்த சோகை பிரச்சினை நீங்கும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவு பொருளாக திகழ்கிறது.
பச்சைப் பயிரையும் உளுந்தையும் நன்றாக சுத்தம் செய்துவிட்டு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை கெட்டியான பதத்திற்கு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவில் தேவையான அளவு உப்பை சேர்த்து கரைத்து வைத்து ஆறிலிருந்து எட்டு மணி நேரம் புளிக்க விட வேண்டும். மாவு புளித்த பிறகு அடுப்பில் இட்லி சட்டியை வைத்து தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் மாவை ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து பிறகு எப்போதும் போல் இட்லியை எடுத்து விடலாம்.
இந்த பச்சைப்பயறு இட்லிக்கு மிகவும் ஏற்றார் போல் இருக்கக் கூடிய இஞ்சி சட்னி செய்முறையை பார்ப்போம். ஒரு அடுப்பில் கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்க்க வேண்டும். இரண்டும் சிவக்க ஆரம்பித்த பிறகு அதில் காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பூண்டு வதங்கிய பிறகு இஞ்சி, சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதங்கிய பிறகு தக்காளி, புளி இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஆறவைத்து கொள்ள வேண்டும். ஆறிய பிறகு இந்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், ஒரு இனுக்கு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: ருசியான வாழைப்பூ உருண்டை குழம்பு செய்முறை
அரிசியே சேர்க்காமல் இந்த வகையில் நாம் இட்லி செய்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாகவும் அதே சமயம் சத்து மிகுந்த உணவாகவும் திகழும்.