இல்லத்தரசிகளுக்கு ஒவ்வொரு நாளும் சமையல் செய்யும்பொழுது என்ன குழம்பு வைப்பது என்பது ஒரு பெரிய போராட்டமாகவே இருக்கும். அப்படி குழம்பு வைத்தாலும் அது ஆரோக்கியமான குழம்பாக இருந்தால் தான் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் பல மருத்துவ குணம் கொண்ட வாழைப்பூவை வைத்து வாழைப்பூ உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
வாழைப்பூவை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது கணையம் வலு பெற்று உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்கப்படும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். எப்பேர்பட்ட மூலமாக இருந்தாலும் இந்த வாழைப்பூவை உண்ணும் பொழுது மூல நோய் விரைவிலேயே குணமடையும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கர்ப்பப்பை தொடர்பான அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் வாழைப்பூ மிகவும் நன்மை தரக்கூடியதாக திகழ்கிறது.
தேவையான பொருட்கள்
- வாழைப்பூ – 1
- கடலை பருப்பு – ஒரு கப்
- சோம்பு – 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 7
- பூண்டு – 2 பல்
- சின்ன வெங்காயம் – 50
- தேங்காய் துருவல் – 1/2 கப்
- அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு
- பொட்டுக்கடலை – 1/2 ஸ்பூன்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- தக்காளி – ஒரு கப்
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- தனியாத்தூள் – 1/2 ஸ்பூன்
- புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
- கடுகு – 1 ஸ்பூன்
- கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
- வெந்தயம் – 1/4 ஸ்பூன்
செய்முறை
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வாழைப்பூவை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு நன்றாக வேக விட வேண்டும். தண்ணீர் முழுவதும் வற்றும் வரை வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஊறவைத்த கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் சோம்பு, காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வேக வைத்திருக்கும் வாழை பூவையும் அதில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த வாழைப்பூ விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றி விட்டு சின்ன வெங்காயம் 20 மற்றும் பூண்டு இவை இரண்டையும் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் துருவல் ரெண்டு ஸ்பூன், அரிசி மாவு, கொத்தமல்லித்தழை இவற்றையும் அந்த வாழைப்பூ மாவுடன் சேர்த்து நன்றாக பிணைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிணைந்த இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது மிக்ஸி ஜாரில் மீதம் இருக்கும் தேங்காய் துருவலை சேர்த்து அதனுடன் பொட்டுக்கடலை, சோம்பு இவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு, வெந்தயம் இவற்றை சேர்த்து கடுகு பொரிந்ததும் அதில் மீதமிருக்கும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
சின்ன வெங்காயம் வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக கரைந்த பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பொழுது ஊற வைத்திருக்கும் புளியை நன்றாக கரைத்து அதில் ஊற்றி விட வேண்டும். பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கொதிக்க ஆரம்பித்த பிறகு நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டையை அதில் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். உருண்டை நன்றாக வெந்த பிறகு மேலே மிதக்க ஆரம்பிக்கும். அப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் ஊற்றி இரண்டு கொதி கொதிக்க விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை அதில் சேர்த்து இறக்கி விட வேண்டும். ருசியான வாழைப்பூ உருண்டை குழம்பு தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: கொய்யா சட்னி செய்முறை
பல சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவை இப்படி குழம்பு செய்து அனைவரின் பாராட்டையும் பெறலாம்.