- Advertisement -
- Advertisement -

பங்குனி உத்திரம் தெய்வத் திருமணங்களுக்கு பஞ்சம் இல்லாத நல்ல நாளாகும். இந்த நாளில் செய்யும் காரியங்கள், தடையில்லாத வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. அள்ள அள்ள குறையாத செல்வங்களும், நிறைவான திருமண வாழ்க்கையும் உண்டாக, பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபடலாம். சுமங்கலி பெண்கள் பங்குனி உத்திரத்தில் தாலிக்கயிறு மாற்றுவது எப்படி? முருகனுக்கு ஏற்ற வேண்டிய தீபம்? பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

பங்குனி உத்திரத்தில் வேண்டுதல் வைத்து விரதம் இருக்க வேண்டியவர்கள் ஒரு நாளில் இருந்து பதினொரு நாட்கள் வரை விரதம் இருக்கலாம். 1, 3, 5, 7, 9, 11 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரிசையாக உங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டு வரலாம். பங்குனி உத்திரம் முருகப்பெருமானை மட்டுமல்லாமல் சிவபெருமான், விஷ்ணு ஆகியோருக்கும் விரதமிருந்து வழிபட ஏற்ற நாளாகும்.

- Advertisement -

காலையிலேயே எழுந்து நீராடி சுத்தபத்தமாக பூஜை அறையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து, சாமி படங்களுக்கு அலங்காரம் செய்து, பன்னீர் அபிஷேகம், பால் அபிஷேகம், சந்தன, குங்கும அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்து விரதத்தை துவங்கலாம். முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் உண்டாகவும், திருமண தடைகள் அகலவும், தம்பதிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்குவதற்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்கும், காதல் கைகூடி வருவதற்கும் பங்குனி உத்திர நாளில் ஆறு வெற்றிலைகளை வைத்து ஆறுமுகனுக்கு விளக்கு ஏற்றி தீபம் போடலாம்.

ஒரு தாம்பூல தட்டில் சந்தன, குங்குமம் இட்டு வெற்றிலைகளை வரிசையாக வட்ட வடிவில் விரித்து வைத்து நடுவில் மலரின் மீது ஒரு அகல் வைத்து பஞ்சு திரியிட்டு நெய் விட்டு தீபம் ஏற்றி வைத்து கந்த சஷ்டி கவசம் பாட, வேண்டிய வேண்டுதல் நிறைவேறும். திருப்புகழ், முருகன் மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், நாமாவளிகள் போன்றவற்றையும் உச்சரிக்கலாம்.

- Advertisement -

காலை, மாலையில் கோவிலுக்கு சென்று தெய்வத் திருமண வைபவங்களை கண்டு ரசித்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்பது நம்பிக்கை. சுமங்கலி பெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும், தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறவும் பங்குனி உத்திர நாளில் புது தாலி கயிறு மாற்றலாம். பூஜைகள் செய்த பின்பு, கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு வழக்கம் போல நீங்கள் புது தாலிக்கயிறை எப்படி மாற்றுவீர்களோ, அது போல மாற்றிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
பங்குனி உத்திரத்தில் பின்பற்ற வேண்டிய 3 விஷயங்கள்

கோவிலுக்கு சென்று அல்லது ஏழை எளியவர்களுக்கு அன்றைய நாள் குளிர்ச்சி பொருந்திய பானகம், நீர்மோர் போன்றவற்றை தானம் செய்தால் விரைவிலேயே புத்ரபாக்கியம் உண்டாகும். அன்னதானம் செய்பவர்களுக்கு வேண்டிய வேண்டுதல் நிறைவேறும். வஸ்திர தானம் செய்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும். குடை தானம் செய்பவர்களுக்கு குறைவில்லாத ஞானம் உண்டாகும். பசுக்களுக்கு புல்லும், வாழைப்பழமும் தானம் செய்ய கோடி புண்ணியம் கிட்டும். மேலும் பங்குனி உத்திரத்தில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதும், குலம் தழைக்க நல்ல பலன்களை கொடுக்கும்.

- Advertisement -