
ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் வழக்கம் என்பது இருக்கும். அன்னாபிஷேகம் அனைத்து சிவ ஆலயங்களிலும் நடைபெறும் வழக்கம் இருக்கிறது. இந்த அன்னாபிஷேகம் என்பது ஒன்று அஸ்வினி நட்சத்திர நாளன்று அல்லது பௌர்ணமி திதி அன்று தான் நடைபெறும். அருகில் இருக்கக்கூடிய சிவாலயங்களில் எந்த நேரத்தில் நடைபெறப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றார் போல் வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அன்னாபிஷேகம் நடைபெறும் நாளில் வீட்டிலும் கோவிலிலும் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
அஸ்வினி நட்சத்திரம் என்பது நவம்பர் மாதம் 14ஆம் தேதி மாலை ஆரம்பிக்கிறது. ஆனால் பௌர்ணமி என்பது நவம்பர் மாதம் 15ஆம் தேதி காலையில் தான் ஆரம்பிக்கிறது. அதனால் எந்த நேரத்தில் ஆலயத்தில் அபிஷேகம் செய்வார்கள் என்பதை அறிந்து வழிபாட்டை மேற்கொள்வது நல்ல பலனை தரும். வீட்டில் நவம்பர் மாதம் 14ஆம் தேதி ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசி சாதத்தையும், ஒரு கிண்ணத்தில் வேகவைத்த பருப்பையும், ஒரு கிண்ணத்தில் நெய் போன்றவற்றை சிவபெருமானுக்கு படைக்க வேண்டும். இதே போல் 15ஆம் தேதியும் சிவபெருமானுக்கு படைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
அன்றைய தினத்தில் அன்னாபிஷேகம் பார்ப்பதன் மூலம் பல கோடி லிங்க தரிசனம் செய்ததற்கு சமமான பலன் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஒவ்வொரு அரிசியும் ஒவ்வொரு லிங்கத்திற்கு சமமாக கருதப்படுகிறது. அதனால் அன்னாபிஷேகம் நடைபெறும் பொழுது அந்த அரிசியை பயன்படுத்தி சிவபெருமானுக்கு அலங்காரம் செய்து தரிசனம் செய்வதன் மூலம் பல கோடி லிங்க தரிசனம் செய்ததற்குரிய பலனை பெற முடியும் என்று கூறப்படுகிறது.
இப்படி நாம் பல கோடி லிங்க தரிசனத்தை செய்வதன் மூலம் நமக்கு முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இயன்றவர்கள் அன்னாபிஷேகம் எப்பொழுது நடைபெறும் என்பதை அறிந்து ஆலயத்திற்கு தங்களால் இயன்ற அளவு பச்சரிசியை வாங்கி அபிஷேகத்திற்கு தர வேண்டும். அதேபோல் அபிஷேகம் நடைபெற்ற பிறகு பிரசாதமாக சாதத்தை தருவார்கள், அந்த சாதத்தை தயிர் சாதமாகவோ வேறு ஏதாவது ஒரு சாதமாகவோ மாற்றி அங்கு வரும் பக்தர்களுக்கு தருவதன் மூலம் அனைத்து விதமான பாவங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இயன்றவர்கள் அன்னதானமும் செய்யலாம்.
குறிப்பு அன்னாபிஷேகத்திற்காக அரிசி வாங்கி தர வேண்டும் என்று நினைப்பவர்கள் பச்சரிசியை தான் வாங்கி தர வேண்டும். புழுங்கல் அரிசியை வாங்கித் தரக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வீட்டில் சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக வைக்கக்கூடிய சாதமும் பச்சரிசி சாதமாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: தீமைகள் விலக ஊதுபத்தி பரிகாரம்
அதிக அற்புதமான வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த அன்னாபிஷேக நாளில் வீட்டிலேயும், ஆலயத்திலேயும் சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் சகல விதமான பாவங்களும் நீங்கும், முக்தி உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.