
முந்திரி வைத்து செய்யப்படும் இந்த காஜூ கட்லியை அனைவராலும் செய்ய முடியாது. அதே நேரத்தில் இது முழுக்க முந்திரிப் பருப்பையே வைத்து செய்யப்படுவதால் இதன் விலை அதிகமாக இருக்கும். இதனால் அனைவரும் வாங்குவது கூட சிரமம் தான் . இனி காஜூ கட்லி சாப்பிட வேண்டும் என நினைத்தால், அதை விட அதிக சுவையான அதே நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடிய வேர்க்கடலையை வைத்து இந்த கட்லியை செய்து தாருங்கள். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த வேர்க்கடலை கட்லியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த கட்லி செய்வதற்கு 250 கிராம் வேர்க்கடலையை எடுத்து மேலே தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு வறுத்த வேர்க்கடலையாக இருந்தால் அப்படியே தோல் உரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை வேர்க்கடலையாக இருந்தால் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை வறுக்கும் போது வேர்க்கடலையில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்து விட கூடாது.
வேர்கடலையின் மேல் தோல் நீக்கிய உடன், அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் சேர்த்து அரைக்கும் போதும் கவனமாக அரைக்க வேண்டும். அதிக நேரம் அறைத்தால் அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்து விடும். எனவே கொஞ்சம் கொரகொரப்பாக இருந்தாலும் எடுத்து அதை ஜலித்து நல்ல ஒரு பவுடராக எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து 250 கிராம் சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை எந்த கப்பில் அளந்து எடுக்கீறிர்களோ அதே அளவு தண்ணீரையும் ஊற்றி சக்கரை ஒரு கம்பி பதம் வரும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை பொடியை இதில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
சர்க்கரை பாகும் வேர்க்கடலையும் ஒன்றாக சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டே இருங்கள். இந்த சமயத்தில் கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து ஐந்து நிமிடம் கலந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஆற விடுங்கள். கட்லி ஆறிய பிறகு சப்பாத்தி மாவு பிசைவது போல் இதை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவு கையில் தொட்டால் ஒட்டாமல் வரும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு மாவை சப்பாத்தி திரட்டும் பலகையில் அகலமாக பரப்பி விட்டு மேலே சப்பாத்தி கட்டையில் வைத்து லேசாக திரட்டி வைத்து விடுங்கள். இதையெல்லாம் செய்யும் போது கொஞ்சம் மிதமான சூட்டில் இருக்கும் போது செய்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு திரட்டவும் துண்டுகள் போடவும் சரியாக இருக்கும். அப்படி பிசைந்து திரட்டிய பிறகு மேலே சில்வர் சீட் ஒட்டி கத்தி வைத்து உங்களுக்கு தேவையான ஷேப்பில் வெட்டு எடுத்து ஒரு தட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுவையான வேர்க்கடலை கட்லி தயார்.
இதையும் படிக்கலாமே: நாலு ஸ்லைஸ் பிரட் இருந்தால் போதும் காலை டிபனுக்கு என்ன செய்வது என்ற டென்ஷனை இல்லாமல் சுலபமான முறையில் இந்த பிரட் ஊத்தப்பம் தயார் செய்து விடலாம்.
வேர்க்கடலை வைத்து செய்யப்படும் இந்த கட்சியை குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் இது உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் அதே சமயம் மிகவும் சுவையாகவும் இருக்கும் நீங்களும் உங்க வீட்டில் இது ட்ரை பண்ணி பாருங்க.