
நம்மில் பெரும்பாலானவர்கள் சாதத்துடன் ஊறுகாய் வைத்து சாப்பிடுவது பழக்கம். இவர்களுக்கு நீங்கள் எத்தனை தான் காய்கறிகளை செய்து வைத்தாலும் கொஞ்சமாவது ஊறுகாய் இருக்க வேண்டும். இது போல ஊறுகாய் பிரியர்களுக்கும், டிபன், சாதம் என எதை செய்தாலும் அதற்கு காரசாரமாக எதையாவது தொட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த பூண்டு தொக்கு சரியாக இருக்கும். இந்த முறையில் செய்யும் இந்த பூண்டு தொக்கு ஊறுகாய் போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம் இட்லி தோசை போன்றவைக்கு தொக்காகவும் வைத்துக் கொள்ளலாம். இரண்டிற்குமே இது மிகவும் அருமையாக இருக்கும். இப்போது இந்த பூண்டு தொக்கு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பூண்டு தொக்கு தேவையான பொருட்கள்: பூண்டு – 500 கிராம், புளி – 100 கிராம், கடுகு – 2 டீஸ்பூன், வெந்தயம் -1 டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – 3 டீஸ்பூன் வெல்லம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 200 கிராம், பெருங்காயம் -1 சிட்டிகை, உப்பு -1 டீஸ்பூன், கருவேப்பிலை -10 இலைகள்.
இந்த பூண்டு தொக்கு செய்ய முதலில் புளியை சுத்தம் செய்து கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும். பூண்டு அனைத்தையும் தோல் உரித்து அதையும் ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணைய் ஊற்றி சூடான பிறகு உரித்து வைத்த பூண்டை இதில் சேர்த்து பூண்டு நன்றாக சிவந்து வரும் வரை நன்றாக வதக்க வேண்டும். இதை செய்யும் போது அடுப்பை லோ பிளேமில் வைத்து வதக்கிக் கொள்ளுங்கள். வதங்கிய பிறகு பூண்டை எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய் அப்படியே இருக்கட்டும்.
இதற்கிடையில் ஒரு சின்ன கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, வெந்தயம் இரண்டையும் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதே போல பூண்டு நன்றாக ஆறிய பிறகு அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து, பூண்டு வதக்கி எடுத்த எண்ணெயை ஊற்றி சூடானவுடன் கடுகு சேர்த்து தாளித்த பிறகு கறிவேப்பிலை போட்டு பொரிந்த உடன் பெருங்காயமும் சேர்த்த பிறகு, அரைத்த பூண்டு பேஸ்ட்டை அதில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது அதில் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருங்கள். இது கொஞ்சம் வதங்கிய பிறகு புளி கரைச்சலை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். புளிக் கரைச்சல் பூண்டு பேஸ்ட் எல்லாம் நன்றாக கொதித்து ஓரளவுக்கு சுண்டி வரும் போது வெல்லம் அரைத்து வைத்த கடுகு வெந்திய பவுடரையும் சேர்த்து மறுபடியும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதையெல்லாம் செய்யும் போது அடுப்பு லோ பிளேமில் இருக்கட்டும். இந்த தொக்கு கொதிக்கும் போது வெளியே தெறிக்கும், ஆகையால் மூடி போட்டு இதை கலந்து விடுங்கள். இது குறைந்தது பத்து நிமிடமாவது இந்த தொக்கு நன்றாக கொதிக்க வேண்டும். அதன் பிறகு தொக்கிலிருந்து எண்ணெய் எல்லாம் பிரிந்து மேலே வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.
இதையும் படிக்கலாமே: சேமியா உப்புமாவை பார்த்ததும் ஒடுறவங்க முன்னாடி இப்படி செஞ்சி வச்சி பாருங்க, சாப்பிட்டு முடிச்சிட்டு இன்னும் கொஞ்சம் இருக்கான்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
இந்த பூண்டு தொக்கை சுட சுட சாதம் வடித்து அதில் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் இட்லி, தோசை, சப்பாத்தி என எதுக்காக வேண்டுமானாலும் இதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம் நீங்களும் உங்கள் வீட்டில் இந்த பூண்டு தொக்கு செய்து பாருங்கள்.