
உத்தியோகம் புருஷ லட்சணம் என்று அன்றைய காலத்தில் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆண்கள் வெளியே சென்று வேலை பார்த்து சம்பாதித்து வீட்டில் கொடுப்பார்கள் என்பதால்தான் அந்த பழமொழி வந்தது. ஆனால் இன்றைய காலத்தில் ஆண்கள் பெண்கள் என்ற எந்தவித வேறுபாடும் இன்றி அனைவரும் வேலைக்கு சென்று தங்களுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். அப்படி வேலைக்கு செல்பவர்களில் பலரும் சந்திக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சனை என்றால் அவர்களுடைய கடின உழைப்பிற்கு ஏற்ற முன்னேற்றம் இல்லாததுதான். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய முருக வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வேலை தொடர்பான காரியங்களுக்கு உகந்த கிரகமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். அதனால் ஒருவருக்கு புதிதாக வேலை வேண்டும் என்றாலோ வேலையில் முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்றாலோ செவ்வாய் பகவானை வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக முருகப்பெருமான் திகழ்கிறார் என்பதால் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுதும் செவ்வாய் பகவானின் அருளை பெற்று நம்முடைய வேலை தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். அந்த வகையில் வேலையில் ப்ரோமோஷன் வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்குரிய கடினமான உழைப்புடன் முருக வழிபாட்டையும் செய்யும் பொழுது விரைவிலேயே ப்ரோமோஷன் கிடைக்கும்.
இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் கோரையான காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளோ இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை முருகன் ஆலயத்தில் செய்வது என்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக முருகனே மூலவராக இருக்கும் ஆலயத்தில் செய்வது கூடுதல் சிறப்பை தரும். அப்படி முருகனே மூலவராக இருக்கும் ஆலயம் இல்லாத பட்சத்தில் சிவாலயத்தில் இருக்கக்கூடிய முருகப்பெருமானுக்கும் இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது மரிக்கொழுந்து மற்றும் செவ்வரளி. இவை இரண்டையும் சேர்த்து மாலையாக கட்டி முருகப்பெருமானுக்கு சாற்றச் சொல்லி தர வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து தங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 13 வாரங்கள் யார் ஒருவர் முருகப்பெருமானை வழிபாடு செய்கிறார்களோ அவருடைய திறமைக்கேற்ற வேலையும் வேலையில் நல்ல முன்னேற்றமும் உண்டாக்கும். 13 வாரங்கள் நிறைவடைந்த பிறகு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்து முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக சமர்ப்பணம் செய்துவிட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தரவேண்டும்.
இதையும் படிக்கலாமே: அக்டோபர் மாதம் அதிர்ஷ்டம் பெருக
வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமான முருகப்பெருமானை இந்த முறையில் முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்து பலனை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.