- Advertisement -
சமையல் குறிப்புகள்

புதுசா ஒரு புதினா சட்னி! இதுவரைக்கும் சுவைக்காத சுவையில். மிஸ் பண்ணாம இப்படி ஒரு முறை புதினா சட்னி அரைச்சு பாருங்க.

- Advertisement -

புதினா சட்னியை விதவிதமாக அரைக்க முடியும். ஒவ்வொரு விதமாக அரைக்கும் சட்னியில் இருந்தும் நமக்கு ஒவ்வொரு சுவை கிடைக்கும். ஒரு மசாலா பொடியை தயார் செய்து, அந்த மசாலா பொடியை சட்னியோடு சேர்த்து அரைத்து வித்தியாசமான முறையில், வித்தியாசமான சுவையில் ஒரு சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கஷ்டம் எல்லாம் இருக்காதூங்க. ரொம்ப ரொம்ப ஈஸியான இந்த சட்னி ரெசிபியை ஒரு முறை கட்டாயம் நீங்களும் ட்ரை பண்ணி பாக்கணும்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், வெள்ளை எள்ளு – 1 ஸ்பூன் இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களெல்லாம் கருதிவிடக்கூடாது. பொன்னிறமாக வறுபட வேண்டும். வெள்ளை எள்ளு உங்கள் வீட்டில் இல்லை என்றால் அதற்கு பதிலாக 2 ஸ்பூன் வேர்க்கடலை கூட சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் சேர்த்து நைஸாக பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த போடி அப்படியே இருக்கட்டும்.

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு, பச்சை மிளகாய் – 6 போட்டு வதக்கிக் கொள்ளுங்கள் பச்சை மிளகாயின், பச்சை வாசனை நீங்கியதும், மீடியம் சைஸ் தக்காளி பழம் – 4 பொடியாக நறுக்கியது, நெல்லிக்காய் அளவு – புளி சேர்த்து தக்காளியின் பச்சை வாடை போகும் வரை வறுக்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்து குழைந்து வர வேண்டும்.

- Advertisement -

தக்காளி நன்றாக வெந்து வந்ததும் ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை தக்காளியுடன் சேர்த்து 2 நிமிடங்கள் போல வதக்கிக் கொள்ளுங்கள். இறுதியாக 3 பல் பூண்டு சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த விழுது நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு சட்னியை மைய அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சட்னியில், ஏற்கனவே பொடி செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா, அந்த பொடியை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியை ஓட விடுங்கள்.

சட்னியும் நாம் அரைத்து வைத்த பொடியையும் சேர்த்து அரைக்கும்போது, இந்த சட்னிக்கு ஒரு புது விதமான வித்தியாசமான சுவை கிடைக்கும். மிக்ஸியில் இருக்கும் இந்த சட்னியை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். எப்போதும் போல நல்லெண்ணெயில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், வர மிளகாய், தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவை அட்டகாசமாக இருக்கும். மேல் சொன்ன அளவுகளுடன் இந்த சட்னியை செய்தால் இரண்டிலிருந்து மூன்று பேர் தாராளமாக சாப்பிடலாம்.

- Advertisement -