
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உரிய மாதம் என்பது பலருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை போடும் வழக்கம் என்பது பலருக்கும் இருக்கிறது. அப்படி தளிகை போடும் போடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சனிக்கிழமையாக பார்த்து தேர்ந்தெடுத்து அந்த நாளில் பலவகையான சாதங்களை செய்து வைத்து பெருமாளுக்கு தளிகை போட்டு அன்னதானம் செய்வார்கள். அப்படி பூரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அன்று தளிகை போடும் முறை மற்றும் வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி மாதத்தில் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு பெருமாளை வழிபாடு செய்வார்கள். அதிலும் குறிப்பாக சனிக்கிழமை அன்று பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். வீட்டில் பல வகையான சாதங்களை செய்து பெருமாளுக்கு விரதம் இருந்து தழுகை போட்டு வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி பெருமாளுக்கு தளிகை போடும் வழக்கம் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டிற்கு எப்பொழுதும் போல் காலையில் சுத்தமாக எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பெருமாளின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தையும் சுத்தம் செய்து அவருக்கு துளசி மாலை சாற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக தளிகை போடுவதற்கு தேவையான பொருட்கள் புளி சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரை பொங்கல், சுத்த அன்னம் (அதாவது பச்சரிசி சாதம் அதில் எதுவும் கலந்திருக்கக் கூடாது அதைத்தான் சுத்தானம் என்று கூறுவோம்) உளுந்து வடை மற்றும் பருப்பு வகைகள். புளி சாதத்தில் அதிகளவு காரம் சேர்க்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. உளுந்த வடையில் வெங்காயம், பூண்டு, மிளகு என்று எதுவுமே சேர்த்திருக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது தான். பருப்பு வகைகள் என்று பார்க்கும் பொழுது பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற போன்றவற்றை நாம் உபயோகப்படுத்தலாம்.
பலரும் தங்களுடைய வீட்டில் தளிகை போடும் பொழுது அவர்கள் சமைத்த உணவை வைத்து பெருமானாக அலங்காரம் செய்து வழிபாடு செய்வார்கள். அப்படி செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த சாதங்களை வைத்து பெருமாளாக உருவகப்படுத்திக் கொள்ளலாம். அப்படி உருவம் வைக்க மாட்டோம் என்பவர்கள் சாதாரணமாக ஒரு தலைவாழை இலையை போட்டு அதில் இந்த சாதங்களை வைத்து பெருமாளை வழிபாடு செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக முறையில் பெருமாளின் படம், சிலை இதை விட சங்கு சக்கர நாமம் வெள்ளியால் செய்யப்பட்டது இருந்தால் அது மிகவும் சிறப்பு. அப்படி வெள்ளியால் வாங்க இயலாது என்று நினைப்பவர்கள் பச்சரிசி மாவால் சங்கு சக்கரம் நாமம் இருப்பது போல் பூஜை அறையில் கோலம் போட்டுக்கொள்ள வேண்டும். கோலம் போடுவதற்கு முன்பாக பன்னீரை தெளித்து சுத்தம் செய்து அதற்கு மேல் கோலம் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக இந்த வழிபாட்டிற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது மூன்று மாவிளக்கு. பச்சரிசியை கழுவி சுத்தம் செய்து இடித்து அதனுடன் வெல்லம், நெய் கலந்து மாவிளக்காக தயார் செய்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நாம் ஏற்கனவே சங்கு சக்கர நாமம் கோலம் போட்டிருப்போம் அல்லவா அதற்கு துளசி இலைகளை பயன்படுத்தி பெருமாளின் 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு முறையும் போற்றிகளை கூறும் பொழுது கடைசியாக கோவிந்தா கோவிந்தா என்று கூற வேண்டும். இப்படி அர்ச்சனை செய்து முடித்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
பிறகு நாம் தளிகை போட்ட உணவிலிருந்து சிறிதளவு மட்டும் தனியாக நம் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவதற்காக எடுத்து வைத்துவிட்டு மீதம் இருக்கும் சாதங்களை அந்தந்த சாதங்களுடன் கலந்து குறைந்தபட்சம் ஏழு நபர்களுக்கு இந்த கலவை சாதங்களை அன்னதானமாக வழங்க வேண்டும். மூன்று மாவிளக்கிலிருந்து ஒரு மாவிளக்கை எடுத்து அதையும் அன்னதானம் செய்யும் பொழுது சேர்த்து தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் நாம் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை தளிகை போட்டு பெருமாளை வழிபாடு செய்தோம் என்றால் ஜாதகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும். நவகிரகங்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:குரு அருள் கிடைத்து செல்வம் செழிக்க செவ்வாழை பரிகாரம்
இந்த வழிபாட்டு முறையை முறையாகப் பின்பற்றி செய்பவர்களுக்கு பெருமாளின் அருளால் அனைத்துவித நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.