- Advertisement -
சமையல் குறிப்புகள்

பஞ்சு போன்ற கார கொழுக்கட்டை ரேஷன் புழுங்கல் அரிசியிலும் வருமா? 10 நிமிஷத்தில் ரேஷன் அரிசியில் கார கொழுக்கட்டை செய்வது எப்படி?

- Advertisement -

அரிசி மாவு வைத்து கார கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு இருப்போம். தாளித்து செய்யப்படும் இந்த கொழுக்கட்டை ரொம்பவே ருசியாக இருக்கும். இதை காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய இந்த கார கொழுக்கட்டை ரேஷன் அரிசியிலும் நாம் செய்ய முடியும். ரொம்பவே சுலபமாக 10 நிமிஷத்தில் பஞ்சு போன்ற மிருதுவான கார கொழுக்கட்டை எப்படி தயாரிக்கலாம்? என்பதை இனி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கார கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
ரேஷன் புழுங்கல் அரிசி – இரண்டு டம்ளர், தண்ணீர் – இரண்டு டம்ளர், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் – ரெண்டு, நறுக்கிய கருவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று.

- Advertisement -

கார கொழுக்கட்டை செய்முறை விளக்கம்:
ரேஷன் அரிசியில் கார கொழுக்கட்டை செய்யும் பொழுது புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு டம்ளர் அளவிற்கு புழுங்கல் அரிசி எடுத்தால் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அதற்கு முன்பு நன்கு புழுங்கல் அரிசியை கல், குருணை எல்லாம் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஆறு ஏழு முறை தண்ணீர் ஊற்றி நன்கு தேய்த்து கைகளால் அலசி அரிசியை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் இரண்டு டம்ளர் அளவிற்கு இப்போது தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஊற வைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி நீங்கள் அரிசி மாவை அரைக்க வேண்டும். சுமார் 4 மணி நேரம் கண்டிப்பாக இந்த அரிசியை ஊற விட்டு விடுங்கள். நாலு மணி நேரத்திற்கு பிறகு உங்களிடம் இருக்கும் பெரிய மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு பாகமாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக அரிசியை மற்றும் தண்ணீரை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரிசியை அரைப்பதற்கு ஊற வைத்த தண்ணீரை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

- Advertisement -

இந்த மாவை அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுந்து சேர்த்து சிவக்க வறுத்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்களை தாளித்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று மற்றும் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் வறுபட்டதும் நீங்கள் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கெட்டிப்பட கிண்டி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
சீக்கிரமா ஸ்லிம்மாக வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இருக்குதா? உடல் எடையை குறைக்க தினமும் அரிசி சேர்க்காத இந்த இட்லியை சாப்பிடுங்க.

அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொண்டு கிண்டி விட்டால் நன்கு திரண்டு வரும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து ஆற விட்டுவிடுங்கள். நன்கு ஆறியதும் சூடு பொறுக்கும் சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு இட்லியை பாத்திரத்தை எடுத்து அதில் வாழை இலை விரித்து அதன் மீது கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்து சாப்பிட்டு பார்த்தால் அவ்வளவு சாஃப்ட்டாக, மிருதுவான பஞ்சு போன்ற கார கொழுக்கட்டை ரெசிபி தயார்! ரேஷன் அரிசியிலும் இதுபோல நாம் கொழுக்கட்டைகள் செய்து அசத்தலாமே!

- Advertisement -