
குழிப்பணியாரம் என்றாலே எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும். தமிழர்களின் பாரம்பரிய சமையலில் பணியாரமும் ஒன்று! அந்த வகையில் ரவையை கொண்டு ரொம்ப சூப்பரான அசத்தலான கார குழிப்பணியாரம் எப்படி செய்யப் போகிறோம்? ஒரு கப் ரவை இருந்தால் போதும் சட்டுனு பத்து நிமிஷத்திலேயே இதை செய்து அசத்திடலாம். இந்த ருசி மிகுந்த ரவைக் குழிப்பணியாரம் எப்படி எளிதாக செய்வது? என்பதை இனி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ரவை கார குழிப்பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், தயிர் – அரை கப், தண்ணீர் – அரை கப், சமையல் எண்ணெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலை பருப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, நறுக்கிய இஞ்சி – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வரமிளகாய் – 1, துருவிய கேரட் – ஒன்று, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சோடா உப்பு – 2 பின்ச்.
ரவை கார குழிப்பணியாரம் செய்முறை விளக்கம்:
ரவை குழி பணியாரம் செய்ய முதலில் ஒரு கப் அளவிற்கு ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ரவை வறுத்த ரவை, வறுக்காத வரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அதே கப் அளவிற்கு அரை கப் தயிர் ஊற்றிக் கொள்ளுங்கள். தயிர் சற்று புளித்த தயிராக இருந்தால் நன்று! இதனுடன் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை கலந்து வைத்ததும் மூடி போட்டு 15 நிமிடம் ஊற விட வேண்டும். அப்பொழுது தான் ரவை தயிர் மற்றும் தண்ணீரை நன்கு உறிஞ்சி கொள்ளும்.
பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து அதில் பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதற்கு தேவையான எல்லா பொருட்களையும் நறுக்கி வைத்த பின்பு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். லேசாக வறுக்கும் பொழுது பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். பின் நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்குங்கள். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு வர மிளகாய் கிள்ளி சேருங்கள். பின்னர் விரும்பினால் ஒரு கேரட்டை நன்கு சுத்தம் செய்து துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பணியாரத்திற்கு கொத்தமல்லி தழை அதிகம் சேர்த்தால் நன்றாக இருக்கும். ஒரு கைப்பிடி அளவிற்கு பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பூண்டு சட்னி பிடிக்காது என்பவர்கள் கூட இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள், சுவையான பூண்டு கார சட்னி எளிதாக எப்படி செய்யலாம்?
பின்னர் நீங்கள் ஊற வைத்த ரவையுடன் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், பணியாரம் உப்பி வருவதற்கு தேவைப்பட்டால் சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பணியார மாவு பதத்திற்கு மாவு ரெடி ஆனதும், பணியார சட்டியில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுத்து சாப்பிட்டு பாருங்கள், சுவையான ரவை குழி பணியாரம் ரெசிபி தயார்! இதே மாதிரி நீங்களும் செஞ்சி பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடித்து போய்விடும்.