
நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு மிகவும் முக்கிய காரணமே அவர்களின் உணவு முறை தான். அவர்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களை அதிகமாக சேர்த்துக் கொண்டனர். ஆனால் நாளடைவில் இந்த பழக்கமானது விடுபட்டு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட சிறுதானிய சேர்க்கை என்பது பெரிய அளவில் இல்லாமல் போனது. ஆனால் இப்பொழுது மறுபடியும் சிறுதானியங்களை நாம் உணவில் சேர்த்துக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் சாமை கூட்டாஞ்சோறு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
சாமை – ஒரு கப், நெய் – 3 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், சோம்பு பொடி – 1/2 டீஸ்பூன், புதினா – 1/2 கைப்பிடி, பச்சை மிளகாய் – 2 ,ஏலக்காய் – 3, மஞ்சள் – ஒரு சிட்டிகை, நாட்டுக் காய்கறிகள் – ஒரு கப் நறுக்கியது, வெங்காயம் – 2, தக்காளி – 2, தயிர் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
முதலில் நாட்டு காய்கறிகளான வெண்டைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், மாங்காய், சுரைக்காய் இவற்றில் சிலவற்றை எடுத்து சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே போல் தக்காளியையும் கழுவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சாமை அரிசியை சுத்தம் செய்து நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் குக்கரை வைத்து, குக்கர் சூடானதும் அதில் நெய்யை ஊற்ற வேண்டும். நெய் சூடான பிறகு, அதில் ஏலக்காய், சோம்பு பொடி, இஞ்சி பூண்டு விழுது இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போன பிறகு, வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, அதனுடன் புதினா, தக்காளி, பச்சை மிளகாயும் சேர்த்து வதக்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் நாட்டு காய்கறிகளை அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், தயிர், உப்பு இவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். ஐந்து நிமிடம் நன்றாக இந்த காய்கறிகளை வேக வைக்க வேண்டும். பிறகு நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சாமை அரிசியை அதனுடன் சேர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: உடல் எடையை சீக்கிரம் குறைக்க, சுவையான சுலபமான முளைகட்டிய பச்சைபயிறு இட்லியை ஒரு அரசி கூட சேர்க்காமல் இப்படித்தான் செய்யணும்.
சாமை அரிசியின் அளவை போல் இரண்டு மடங்கு தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி வைத்து விடலாம். குக்கர் இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். தேவைப்பட்டால் விசில் போன பிறகு கொத்தமல்லி தழையை தூவி கிளறி பரிமாறலாம். அவ்வளவு தான் கமகமக்கும் சத்தான சாமை கூட்டாஞ்சோறு தயாராகி விட்டது.