உடல் பருமன் அதிகமாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் எடை குறையவில்லை என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த இட்லியை முயற்சி செய்யலாம். அதேபோல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று சின்ன சின்ன காய்ச்சல், இரும்பல், தலைவலி, வந்தால் கூட தாங்காமல் அவதிப்படுகிறார்கள். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து என்பது கிடைப்பதே கிடையாது. ஆரோக்கியத்தோடு சேர்ந்த அழகை பெற வேண்டும் என்றாலும், இந்த இட்லி ரெசிபி உங்களுக்கு கை கொடுக்கும். எப்போதும் அரிசியில் தானே இட்லி செய்து சாப்பிடுகின்றோம். அதைவிட பல மடங்கு சத்து நிறைந்த முளைகட்டிய பச்சை பயிறு இட்லி ரெசிபி இதோ உங்களுக்காக.
செய்முறை
பச்சைப்பயிறு – 1 கப், உளுந்து – 1/2 கப், வெந்தயம் – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும். சத்து நிறைந்த இட்லியை செய்து விடலாம். பச்சை பயிறை நன்றாக கழுவி விட்டு, நல்ல தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். 8 மணி நேரம் ஊறிய பச்சை பயிரை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விட்டு, ஒரு வெள்ளை காட்டன் துணியில் இறுக்கமாக கட்டி வைத்தால் அடுத்த எட்டு மணி நேரத்தில் முளைத்து கிடைத்து விடும். இதை அப்படியே இட்லி செய்ய பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
உளுந்தை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு 1 ஸ்பூன் வெந்தயத்தையும் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த 2 பொருட்களும், 2 மணி நேரம் ஊறிய பின்பு மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரில் போட்டு பொங்க பொங்க அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து முளை கட்டிய பச்சைப் பயிரை மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு விழுதாக அரைத்து, ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் உளுந்துடன் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு உங்கள் கையை கொண்டு கரைத்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் புளிக்க விட்டால். இட்லி செய்ய மாவு தயார். இந்த சாதாரண வெள்ளை உளுந்துக்கு பதில் கருப்பு உளுந்து பயன்படுத்தினால் இட்லியில் சத்து இன்னும் பல மடங்கு கூடும்.
வழக்கம்போல இட்லி தட்டில் எண்ணெய் தடவி புளித்த பச்சைபயிறு இட்லி மாவை வார்த்து ஆவியில் 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சூப்பரான முளை கட்டிய பச்சை பயிறு இட்லி தயார். இந்த இட்லிக்கு வழக்கம் போல சட்னி சாம்பார் சைட் டிஷ் ஆக வைத்து பரிமாறலாம்.
காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவாகவும் இந்த இட்லியை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு முளைக்கட்டிய பச்சைப் பயிறு கொடுத்தால் விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். அதை அரைத்து இப்படி இட்லி செய்து கொடுங்கள். அவர்கள் இரண்டு இட்லி சாப்பிட்டால் கூட அது நிறைவான உணவாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: ரூமாலி ரொட்டி செய்முறை
இந்த இட்லியை சாப்பிடுவதன் மூலம் இதயம் ஆரோக்கியம் பெறும். இரத்த அழுத்தம் கட்டுக்கோப்பாக இருக்கும். சருமம் பொலிவு பெறும். உடல் எடை குறையும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் இந்த இட்லி மிகவும் நல்லது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த இட்லி ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம வாரம் ஒரு முறை உங்க வீட்ல செஞ்சு பாருங்க.