
முருகப் பெருமானுக்குரிய மிகச் சிறப்பான விரதங்களுள் ஒன்று கந்த சஷ்டி விரதம். ஆறு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் இந்த விரதத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பலன்களை அள்ளித் தருகிறது. மூன்றாம் நாள் விரதமானது, முருகப்பெருமானை ஞான குருவாக வழிபடுவதற்கு உரிய நாளாகும். இந்த நாளில் முருகரை எப்படி வழிபட நம்மை யாரும் வெல்ல முடியாத அளவிற்கு ஞானம் பெறுவது? என்னும் ஆன்மீகம் சார்ந்த ரகசியத்தை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
நாளை கந்த சஷ்டி விரதத்தின் மூன்றாம் நாள் அதிகாலையில் எழுந்து நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, வீட்டில் உள்ள பூஜை அறையில் திருவிளக்கேற்றி முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கோ அல்லது விக்ரகத்திற்கோ உரிய அலங்காரங்களைச் செய்ய வேண்டும். விரதத்தை விதிப்படி தொடங்குவதாக மனதார சங்கல்பம் அதாவது உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமான எலுமிச்சை சாதத்தை நைவேத்தியமாகப் படைப்பது இந்த நாளில் ரொம்பவும் விசேஷம். இதனுடன் பால், பழங்கள் போன்ற எளிமையான உணவுகளையும் படைக்கலாம். இந்த நாளில் முருகப் பெருமானை ஞான குருவாக எண்ணி வழிபடுவதால், கல்வி, ஞானம், தெளிந்த புத்தி, சிறந்த கலை அறிவு ஆகியவற்றை வேண்டி மந்திரங்களைச் சொல்லலாம்.
சடாட்சர மந்திரம்:
“ஓம் சரவண பவ”
இந்த மந்திரத்தை இடைவிடாமல் ஜபிப்பது சிறப்பு. முருகனின் புகழைப் பாடும் திருப்புகழ் பாடல்கள், குறிப்பாக ஞானம், குருவருளைக் கோரும் பாடல்களையும், கந்தசஷ்டி கவசத்தையும் முழு மனதுடன் பாராயணம் செய்வது அல்லது கேட்பது மிக நல்லது. “உருவாய் அருவாய், உளதாய் இலதாய்…” என்று தொடங்கும் திருப்புகழ் பதிகத்தை சொல்வதும் செல்வ வளத்தையும், ஞானத்தையும் தரும்.
3ஆம் செய்ய வேண்டிய அபிஷேகங்கள்:
பொதுவாக கந்த சஷ்டி விரத நாட்களில், வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ முருகனுக்கு செய்யப்படும் அபிஷேகத்தைப் பார்த்து வணங்குவது புண்ணியம். மூன்றாம் நாளில், முருகப்பெருமானுக்குச் செய்யப்படும் அபிஷேகமானது ஞானத்தை வழங்கும். சந்தனம், பன்னீர், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் போன்ற வழக்கமான அபிஷேகப் பொருட்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானது. ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று, ஞான வடிவான முருகனை மனதாரப் பிரார்த்திக்க வேண்டும். அபிஷேகம் செய்யப்பட்ட பாலைப் பருகுவது புத்திர பாக்கியம் தரும் என்பது ஐதீகம்.
இதையும் படிக்கலாமே:
அடுப்பு சாஸ்திரம்
மூன்றாம் நாளில் செய்ய வேண்டிய சிறப்பு தானமாக எறும்புகளுக்கு தானம் செய்வது சொல்லப்படுகிறது. பச்சரிசி மாவில் கோலமிடுவதும், பச்சரிசி மாவை அல்லது சர்க்கரை கலந்த மாவை எறும்புகள் அதிகம் உள்ள இடத்தில் தூவுவதும், பசியோடு இருக்கும் சிறிய உயிர்களுக்குச் செய்யும் தானமாக கருதப்படுகிறது. இது அனைத்து உயிர்களிடத்தும் கருணை காட்டும் உயர்ந்த பண்பை உணர்த்துகிறது. இந்த மூன்றாம் நாள் விரதத்தின் நோக்கம், ஆணவம், வன்மம், மாயை ஆகிய மூன்று அசுர சக்திகளை அழிக்கும் பக்குவத்தை நாம் பெறுவதாகும். முருகனை ஞான குருவாக வழிபடுவதன் மூலம், தெளிந்த ஞானத்தைப் பெற்று, வாழ்க்கையின் இருளை நீக்கி, இம்மைக்கும் மறுமைக்கும் சிறப்பான வழியை அமைத்துக் கொள்ளலாம். “கந்தனுக்கு அரோகரா! சரவணபவ!” என்று மனம் ஒன்றி நாளை முருகனை நினைத்து அனைவரும் துதிப்போம்.