
முருகப் பெருமானின் திருவருளைப் பெற, ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் மகத்தான விரதமே கந்த சஷ்டி விரதம். இதில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு உண்டு. முதல் நாள் விரதத்தைத் தொடங்கி, முருகனின் சிந்தனையிலேயே இருக்கும் பக்தர்களுக்கு, இரண்டாம் நாள் வழிபாடு மிகுந்த பலன்களைத் தரக்கூடியது. இந்த நாளில் சொல்ல வேண்டிய மந்திரங்கள் மற்றும் செய்ய வேண்டிய அபிஷேகங்கள், வழிபாடு முறைகள் போன்ற தகவல்களை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
பொதுவாக, கந்த சஷ்டியின் இரண்டாம் நாள் விரதத்தை அனுஷ்டிப்பதால், திருமணத் தடை நீங்குதல், நல்ல வரன் கைகூடுதல் மற்றும் மாங்கல்ய பலம் கூடி, தீர்க்க சுமங்கலியாக வாழும் வரம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. அதாவது, குடும்ப நலமும், தம்பதியர் நலமும் செழிக்க இரண்டாம் நாள் வழிபாடு உகந்தது. இரண்டாம் நாள் விரதமிருப்பவர் அதிகாலையில் எழுந்து நீராடி, தூய்மையான ஆடையை அணிய வேண்டும்.
பூஜை அறையை சுத்தம் செய்து, முருகப் பெருமானின் படம் அல்லது விக்ரகத்தை வைத்து, மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பூஜையறையில், முருகனுக்குப் பிரியமான ஷட்கோணக் அதாவது ஆறுகோண கோலமிட்டு அதன் மீது விளக்கேற்றுவது விசேஷம். நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இந்த நாளில், இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடுவது சிறந்தது என்றும் கூறுவார்கள். இரண்டாம் நாள் வழிபாட்டில் இரண்டு தீபங்கள் ஏற்றி வைப்பது முறையாகும்.
முருகனுக்குப் பிரியமான பால், பழம், சர்க்கரைப் பொங்கல் அல்லது வெல்லம் கலந்த தினை மாவு போன்ற எளிய உணவுகளைப் படைக்கலாம். நாள் முழுவதும் முருகனின் திருநாமங்களை உச்சரித்து, மனதளவில் அவரைத் தியானித்து, விரத நியமங்களைப் பின்பற்ற வேண்டும். உணவு கட்டுப்பாட்டை அவரவர் உடல்நிலைக்கேற்ப அனுசரித்துக் கொள்ளலாம். இரண்டாம் நாளில் முருகனை மனமுருக வேண்டி, கீழ்க்கண்ட மந்திரங்கள், துதிகள் மற்றும் பாடல்களைப் பாராயணம் செய்வது அதிக பலன்களைத் தரும்.
முருகன் மந்திரம்:
ஓம் சரவண பவ (அல்லது) முருகா சரணம்!
முருகன் காயத்ரி மந்திரம்:
ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்!
விரதத்தின் போது கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, அருணகிரிநாதர் அருளிய ‘மயில் விருத்தம்’ பாடலைப் பாராயணம் செய்வது கணவன் ஆயுள் பலம் கூடி, தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க மிகவும் விசேஷமானது என்று கூறப்படுகிறது. வீட்டில் விரதம் இருப்பவர்கள், இரண்டாம் நாள் வழிபாட்டின் போது, காலையில் முருகப் பெருமானின் சிறிய விக்ரகம் அல்லது வேலுக்கு பால் மற்றும் பன்னீரால் அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை பயக்கும். அபிஷேகத்திற்குப் பிறகு, சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரித்துத் தீப ஆராதனை காட்டுதல் வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
ஆரோக்கியம் நிறைந்த மிளகு சாதம்
விரதத்தின் இரண்டாம் நாள், நாம் உலக இன்பங்களில் இருந்து மனதை விலக்கி, முருகனின் அருள் ஒளியை நாடும் ஒரு படிநிலையைக் குறிக்கிறது. பக்தியுடன் அனுஷ்டிக்கும் இந்த விரதம், நம் உள்ளத்தில் உள்ள அசுரத் தன்மைகளை அழித்து, ஞானத்தையும், மன அமைதியையும், கேட்ட வரங்களையும் அருளக்கூடியது. முழு நம்பிக்கையுடன் இரண்டாம் நாள் வழிபாட்டை முடித்து, நாள் முழுவதும் முருகனின் திருவருளைச் சிந்திப்போம்.