
மாதத்தில் 15 திதிகள் வரும். பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரை வரும் 15 திதிகள் தேய்பிறை திதிகள் என்றும் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வரக்கூடிய திதிகள் வளர்பிறை திதிகள் என்றும் கூறுகிறோம். ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தெய்வத்தை நாம் வழிபடும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. உதாரணமாக சதுர்த்தி திதி அன்று விநாயகப் பெருமானையும், பஞ்சமி திதி அன்று வராகி அம்மனையும், அஷ்டமி திதி அன்று பைரவரையாம், சஷ்டி திதி அன்று முருகப்பெருமானையும் வழிபடுவோம். இந்த தெய்வங்களை அந்த திதி அன்று நாம் வழிபடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் ஷஷ்டி திதி என்று முருகப்பெருமான எளிமையான முறையில் வழிபடும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய இஷ்ட தெய்வத்திற்கு உகந்த திதி என்ன என்பதை தெரிந்து கொண்டு அந்த திதியில் அந்த தெய்வத்தை வழிபடுவதன் மூலம் நமக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதை போல் வளர்பிறையில் வரக்கூடிய திதியை நாம் வழிபடுவதன் மூலம் செல்வ செழிப்பு மேலோங்கும் என்றும், தேய்பிறையில் வரக்கூடிய திதியை நாம் வழிபடுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தேய்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக சஷ்டி திதி என்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற கூற்று பலருக்கும் தெரியும். இதை நிரூபிக்கும் வகையில் தான் அந்த காலத்திலேயே சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி வந்தது. கடுமையான விரதம் இருந்து தெய்வத்தை வழிபடுவதன் மூலம் தான் நமக்கு பலன்கள் கிடைக்கும் என்று நினைக்கக் கூடாது.
மிகவும் எளிமையான வகையில் தெய்வத்தை நாம் வழிபட்டாலும் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். தங்களால் இயன்ற வழிபாட்டை மேற்கொண்டு தெய்வத்தின் அருளை பெற முடியும். சரி சஷ்டி திதி என்று மிகவும் எளிமையான முறையில் முருகப் பெருமானை வழிபடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
சஷ்டி திதி அன்று முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு எண்ணெய் காப்பு செய்வதற்காக நல்லெண்ணெய் வாங்கித் தர வேண்டும். அதேபோல் முருகப்பெருமானின் கற்பகிரகத்தில் இருக்கக்கூடிய விளக்கிற்கு தீபம் ஏற்றுவதற்காக சுத்தமான பசு நெய்யை வாங்கித் தர வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களை வாங்கித் தருவதன் மூலமும் நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகளை நம்மால் பெற முடியும்.
இந்த மூன்று பொருட்களை மட்டும் நாம் சஷ்டி திதியில் வாங்கித் தருவதன் மூலம் நாம் வேண்டியவற்றை முருகப்பெருமான் நமக்கு வாரி வழங்குவார். இதோடு மட்டும் அல்லாமல் கந்த சஷ்டி கவசத்தை மூன்று முறை தொடர்ந்து பாராயணம் செய்ய வேண்டும். மூன்று முறை பாராயணம் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தை முழுமனதோடு கேட்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
இதோடு மட்டுமல்லாமல் இந்த வழிபாட்டை செய்து விட்டு நாம் தொடங்கும் வேலையாக இருந்தாலும் சரி புதிய தொழிலாக இருந்தாலும் சரி இவை இரண்டும் மிகவும் சிறப்பாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: சித்திரை முதல் நாள் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்
மிகவும் எளிமையான இந்த முருகர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும்.