
சொந்தமாக ஒரு வீடு கட்டி அதில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைக்காத ஆளே இல்லை. ஒரு வேளை சொந்தமாக இடமே இருந்தாலும் அதில் ஒரு வீடு கட்டும் யோகம் இல்லாமல் பலரும் ஏக்கத்துடன் வாழ்கிறார்கள். அந்த அளவிற்கு சொந்த வீடு அமைவது ஒரு பெரும் வரமாக பார்க்கப்படுகிறது. அப்படியான ஒரு வரத்தை நாம் ஏற்றக் கூடிய ஒரு தீபத்தின் மூலம் எளிமையாக பெற்று விடலாம் என்று சொல்லப்படுகிறது. இதை படிக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!. அது என்ன தீபமென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த பரிகாரத்தை சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே சொந்த வீட்டில் வாழ்பவர்கள் மற்றொரு வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என நினைத்தாலும் கூட இதை செய்யலாம். அப்படி என்ன பரிகாரம் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
இந்த பரிகாரம் ஒரு தீபம் ஏற்றும் முறை தான். நாம் தினந்தோறும் வீட்டில் ஏற்றக் கூடிய தீபத்தில் ஒரே ஒரு பொருளை சேர்ப்பதனால் இந்த யோகம் நமக்கு விரைவில் அமையும் என்று சொல்லப்படுகிறது. இதை கேட்கும் பொழுது பலரும் ஒரு தீபத்தினால் இது நடக்குமா? என்றால் நடக்கும் என்று தான் சொல்கிறார்கள். இந்த தீபத்தை நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டும். அதுவும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இந்த தீபம் ஏற்றுவதற்கு நம் வீட்டில் எப்பொழுதும் பயன்படுத்தும் விளக்கே போதும் அது காமாட்சி அம்மன் விளக்கு, அகல் விளக்கு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த தீபம் ஏற்றுவதற்கு முன்பாக வீட்டில் இருக்கும் விநாயகர் படத்தை சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மலர் சாற்றி அவருக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தும் விளக்கை சுத்தம் செய்து அதற்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு விளக்கை நல்ல நறுமணம் மிக்க பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இது மிக மிக முக்கியம். ஏனெனில் இந்த பரிகாரத்திற்கு முக்கியமானது தீபம் தான். ஆகையால் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் விளக்கை நாம் அலங்கரித்து வழிபடுவது அவசியம். அப்படி அலங்கரித்து விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் உற்ற வேண்டும். அதே போல் இரட்டை பஞ்சுத் திரியை ஒன்றாக சேர்த்து அதில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி தீபம் ஏற்றும் போது புதிதாக வீடு கட்ட வேண்டும் என நினைப்பவர்கள் அந்த விளக்கின் கீழ் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். ஏற்கனவே எங்களுக்கு வீடு இருக்கிறது இன்னும் ஒரு வீடு அமைய வேண்டும் என நினைப்பவர்கள் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை விளக்கில் போட வேண்டும். இந்த விளக்கை ஏற்றி வைத்து அதற்கு முன் அமர்ந்து உங்கள் கனவு நினைவாக வேண்டும் என்று விநாயகப் பெருமானிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த தீபத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றுவது சிறந்தது. தீபம் ஏற்றும் போதெல்லாம் உங்கள் எண்ணம் முழுவதும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனே இருக்க வேண்டும். தீபம் ஏற்றுவதுடன் சேர்த்து நீங்கள் வீடு கட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியையும் இடைவிடாது தொடர வேண்டும். இதுவரை வீடு கட்டும் யோகம் அமையாமல் தள்ளிப் போனவர்களும் அல்லது அதற்கான வாய்ப்பே கிடைக்காதவர்கள் உனக்கும் கூட இந்த வழிபாடு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:தானம் பெரிதா? தர்மம் பெரிதா?
நம்பிக்கையுடனும் உங்கள் முழு முயற்சியுடனும் இந்த வழிபாட்டை சேர்த்து செய்யும் பொழுது நிச்சயம் அதற்கான பலனை விரைவில் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தீப வழிபாட்டை செய்து உங்கள் சொந்த வீட்டு கனவை நினைவாக்க முயற்சிக்கலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.