
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சுபகாரியம் என்பது கண்டிப்பான முறையில் நடைபெறும். சுப காரியம் என்றதும் பலரும் திருமணம் நடைபெறுவதை தான் நினைத்திருப்பார்கள். ஆனால் ஒருவருடைய வாழ்க்கையில் சுபம் அதாவது நல்லது நடைபெறுவதற்குரிய காரியங்கள் அனைத்துமே சுப காரியங்கள் என்று தான் கூறுவோம். பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததற்கு பிறகாக அதற்கு மொட்டை அடித்த காது குத்துவதும் சுபகாரியம்தான். அதை பள்ளியில் சேர்ப்பதும் சுப காரியம் தான். அது நன்றாக படித்து மேற்படிப்பிற்கு போவதும் சுபகாரியம்தான். வேலை கிடைப்பதும் சுபகாரியம்தான்.
திருமணம் நடைபெறுவதும் சுபகாரியம்தான். குழந்தை பிறப்பதும் சுபகாரியம்தான். வீடு கட்டி குடியேறுவதும் சுப காரியம்தான் என்று ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளையும் சுப காரியங்கள் என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் உண்டாகும் பட்சத்தில் விநாயகப் பெருமானை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காரிய தடையை நீக்கி காரிய வெற்றியை தரக்கூடிய அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்பது பலருக்கும் அறிந்த உண்மையே. அதனால்தான் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். மேலும் திருமணம் நடைபெறும் பொழுதும், யாகங்கள் செய்யும்பொழுதும், பூஜைகள் செய்யும் பொழுதும் முதலில் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து தான் வழிபாடு செய்வார்கள். பிறகு தான் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்பார்கள்.
இப்படி செய்வதன் மூலம் அந்த காரியம் நடைபெறுவதில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்குவதற்கு மஞ்சளில் விநாயகரை பிடித்து வைக்க வேண்டும். மஞ்சள் என்பது மங்களகரமான பொருள். மேலும் இந்த மஞ்சள் பிள்ளையாரை நாம் வியாழக்கிழமை அன்றுதான் பிடித்து வைக்க வேண்டும்.
குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள் அல்லவா? அப்படிப்பட்ட குரு பகவானுக்குரிய கிழமையாக திகழக் கூடியது வியாழக்கிழமையில் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து வழிபாடு செய்தோம் என்றால் விநாயகரின் அருளும் அதே சமயம் குருபகவானின் அருளும் நமக்கு கிடைத்து விரைவிலேயே சுப காரியங்கள் நடைபெறும். இப்படி நாம் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைக்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
முதலில் இதற்காகவே தனியாக மஞ்சளை வாங்கி பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை கொட்டி அதனுடன் சிறிது பச்சை கற்பூரம், சிறிது ஜவ்வாது சேர்த்து இதில் சிறிதளவு மட்டும் பன்னீரை ஊற்றி கெட்டியாக பிணைந்து பிள்ளையாராக பிடித்துக் கொள்ளுங்கள். இந்த பிள்ளையாரை தரையிலோ தட்டிலோ வைக்க கூடாது. வாழை இலை, வெற்றிலை, அரச இலை, மாயிலை போன்ற இலைகளில் ஏதாவது ஒரு இலையின் மீது இந்த மஞ்சள் பிள்ளையாரை வைக்க வேண்டும்.
அவருக்கு குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கண்டிப்பான முறையில் ஒரே ஒரு அருகம்புல் ஆவது அவருக்கு வைக்க வேண்டும். இப்படி வைத்து விட்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதாவது எந்த சுபகாரியம் நடைபெறுவதில் தடைகள் இருக்கிறதோ அல்லது எந்த சுபகாரியம் நடைபெற வேண்டுமோ அதை மனதார கூற வேண்டும். விநாயகரின் மந்திரம் தெரிந்தவர்கள் மந்திரத்தை கூறலாம். இந்த மஞ்சள் ஆனது அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.
மறுவாரம் அதாவது புதன்கிழமை அன்று இந்த மஞ்சளை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து தினமும் நம்முடைய நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். யாருக்கு சுபகாரிய தடைகள் இருக்கிறதோ அவர் கண்டிப்பான முறையில் நெற்றியில் இந்த மஞ்சளை வைத்துக் கொள்ள வேண்டும். வியாழக்கிழமை மறுபடியும் புதிதாக மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து பழைய மஞ்சள் மீதமிருக்கும் பட்சத்தில் அதை தண்ணீரில் கரைத்து செடிகளில் ஊற்றி விடலாம்.
இதையும் படிக்கலாமே தீர்க்கவே முடியாத நோயை தீர்க்கும் கடுகு தீப வழிபாடு.
இப்படி தொடர்ச்சியாக 11 வாரங்கள் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்ய தடைபட்டிருக்கும் சுப காரியங்கள் அனைத்தும் விரைவிலேயே நடந்தேறும் முழு நம்பிக்கையுடன் விநாயகரை மஞ்சளில் பிடித்து வைத்து வழிபாடு செய்து முழு பலனையும் பெறுங்கள்.