
தங்கம் போல முகம் பளபளவென்று கரடு முரடாக இல்லாமல் நைசாக பளிங்கு போல இருக்க தான் பெண்களின் இயல்பான கனவாக இருக்கும். இயற்கையாகவே சிலருடைய முகம் ரொம்பவும் மென்மையாகவும், மிருதுவாகவும் தங்கம் போல ஜொலிக்கும். சுற்றுச்சூழல் மாசு, நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, மன இறுக்கம் என்று நம்முடைய சருமத்திற்கு நாமே தீங்கு விளைவித்து கொண்டிருக்கிறோம். இதிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, நம் சருமம் தங்கம் போல பொலிவாக இருக்க என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.
முகம் தங்கம் போல ஜொலிப்பதற்கு விலை உயர்ந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இனி இல்லை. சாதாரணமாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்தே நம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்கு மிகவும் முக்கியமான ஒரு பொருள் கற்றாழை! கற்றாழையில் இருக்கும் இயற்கையான மூலக்கூறுகள், நம் சருமத்தை உள்ளிருந்தே ஆரோக்கியத்தை மீட்டுக் கொடுக்கிறது.
பெரிய கற்றாழை மடல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மேல் பகுதியை சீவி விட்டு உள்ளே இருக்கும் ஜெல் பகுதியை மட்டும் எடுத்து, நன்கு ஆறேழு முறை தண்ணீரில் அலசிக் கொள்ளுங்கள். கற்றாழையிலிருந்து வழியும் பச்சை நிற திரவம் முகத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும், எனவே நன்கு அலசிய பின்பு அதை கூழ் போல மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து எடுத்த இந்த பிசுபிசுப்பான கற்றாழை ஜெல்லுடன், இன்னும் இரண்டு பொருட்களை சேர்க்க இருக்கிறோம். முதலாவதாக நாம் காலையில் எழுந்ததும் முதலில் தேடுவது காபி பொடியை தான். இந்த காபியில் ஏராளமான நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன. இது சருமத்தை ஆன்ட்டி ஏஜிங் அதாவது முதிர்ந்த தோற்றத்திலிருந்து இளமையாக வைத்துக் கொள்ள உதவும், மேலும் முகப்பருக்கள் வராமலும் பாதுகாக்கும்.
தேவையான அளவிற்கு கற்றாழை ஜெல்லுடன், கால் டீஸ்பூன் காபி பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த பிராண்ட் காபி பவுடர் பயன்படுத்தினாலும் பரவாயில்லை. பின்னர் இதனுடன் முகத்திற்கு பொலிவை கூட்டுவதில் முதலிடம் வகிக்கும் கடலை மாவை அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். கடலை மாவு முகத்தை இயற்கையாகவே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். கடலை மாவை கொண்டு முகத்தை மென்மையாக மசாஜ் செய்யும் பொழுது, இறந்த செல்கள் வெளியேறி புதிய செல்களை உருவாக்கும். மேலும் சருமத்திற்கு நல்ல ஒரு ரத்த ஓட்டமும் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:
சிவராத்திரி மூன்றாம் கால வழிபாடு
இந்த மூன்று பொருட்களையும் நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். பின்பு அதை முகம், கழுத்து, கை, கால் ஆகிய வெளியில் தெரியும்படியான பகுதிகளில் நன்கு தடவி அரை மணி நேரம் விட்டு விடுங்கள். உலர்ந்து காய்ந்து, இறுகி வர வேண்டும். அதன் பின்பு நீங்கள் சாதாரண தண்ணீர் கொண்டு கழுவி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் மட்டுமல்லாமல் கை, கால்களில் இருக்கும் கருமையை நீக்கவும் பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை உங்கள் சருமத்திற்கு என்று அரை மணி நேரம் இப்படி ஒதுக்கி பாருங்கள், நம்முடைய முகமா இது? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தங்கம் போல உங்கள் மேனி உத்தரவாதத்துடன் மின்னும்.