
ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவர்களின் உடம்பில் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் உடம்பிற்கு தேவையான கொழுப்புச் சத்துகள் அதிகமாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். அது போல உடம்பிற்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை சரிவிகிதத்தில் இருக்கிறதா என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்பொழுதெல்லாம் சிறுவயதிலேயே கொலஸ்ட்ரால், பிபி, சுகர் போன்ற நோய்கள் அனைவரையும் பற்றிக் கொள்கின்றன. இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவாக கூட இருக்கலாம். எனவே உணவில் அதிகமாகப் புரதச் சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ள பயிறு வகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி அனைத்து வயதினருக்கும் ஏற்ற பயிறு வகையில் ஒன்றான இந்த ராஜ்மாவை பலரும் பயன்படுத்துவதே கிடையாது. ஆனால் இது உடம்பிற்கு மிகவும் சத்து நிறைந்ததாக இருக்கிறது. இதனை வைத்து இப்படி சுவையான மசாலா கிரேவி செய்து கொடுத்தால் அனைவரும் தட்டாமல் சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ராஜ்மா – 200 கிராம், வெங்காயம் – 1, தக்காளி – 2, தயிர் – 2 ஸ்பூன், மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – அரைஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதல் நாள் இரவே இந்த ராஜ்மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, இதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். இவை 8 மணி நேரம் ஊறிய பிறகு மறுநாள் காலை இதனை குக்கரில் சேர்த்து, இவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பின் மீது வைத்து 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 2 தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் 1 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் வேக வைத்துள்ள ராஜ்மாவில் இருக்கும் தண்ணீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு இவற்றுடன் கால் மூடி தேங்காயை அரைத்து, தேங்காய் பால் எடுத்து, அதனையும் சேர்த்து இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து, குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் போதும். சுவையான ராஜ்மா கிரேவி தயாராகிவிடும்.