
நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களை நீக்குவதற்கு சிவபெருமானை வழிபடுவதற்குரிய நாளாக கருதப்படுவது தான் பிரதோஷ நாள். சிவபெருமானுக்குரிய கிழமையான திங்கட்கிழமை அன்று பிரதோஷ நாள் வருவதை தான் சோமவார பிரதோஷம் என்று கூறுகிறோம். அதிலும் தை மாதத்தில் வரக்கூடிய சோமவார பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் மனரீதியாக இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நமக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றால் அதில் முழுக்க முழுக்க நம்முடைய மனதின் பங்கு தான் அதிகமாகவே இருக்கும். மனம் போன போக்கில் நாம் போனோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் நம்மால் ஜெயிக்கவே முடியாது என்று கூட கூறலாம். எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுத்தால்தான் நம்மால் வெற்றி பெற முடியும். அந்த முடிவை தெளிவாக எடுப்பதற்கு மனம் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட மனத்தை செம்மையாக்கி நல்ல தீர்க்கமான முடிவை எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சந்திர பகவானின் அருள் கண்டிப்பாக வேண்டும். அந்த சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமை அன்று பிரதோஷ நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் மன கஷ்டங்களும், மனக்கசப்புகளும் நீங்கி மனம் செம்மையாகி தெளிவான முடிவை எடுக்க முடியும்.
இந்த சோமவார பிரதோஷம் என்பது ஜனவரி மாதம் 27ஆம் தேதி வருகிறது. அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வரக்கூடிய சந்திர ஹோரையில் இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம். அன்றைய தினத்தில் காலையிலும் மதியத்திலும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் பிரதோஷ நேரம் முடிந்த பிறகு எளிமையான உணவை எடுத்துக் கொள்வது சிறப்பு.
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஆறு நெல்லிக்கனி வேண்டும். அதை சரிசமமாக நறுக்கி அதன் கொட்டையை நீக்கிவிட்டு 12 நெல்லிக்கனிகளாக மாற்றி அதில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தாம்பாள தட்டை எடுத்து இந்த 12 தீபங்களையும் அந்த தாம்பாள தட்டை சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே சந்திர பகவானுக்குரிய பச்சரிசியை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது பச்சரிசியால் செய்யப்பட்ட இனிப்பை நிறைவேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு உங்களுடைய மன கஷ்டங்கள் என்னென்ன இருக்கிறதோ அவை அனைத்தையும் கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்துவிட்டு இந்த தீபத்தை எடுத்து சிவபெருமானுக்கு ஆரத்தி காட்டி சிவபெருமானின் முன்பாக வைத்து விட வேண்டும். பிறகு சிவபெருமானுக்குரிய இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். பிறகு சிவபுராணத்தை ஒரு முறை முழுமையாக நிறுத்தி நிதானத்துடன் படிக்க வேண்டும். பணம் தொடர்பான கஷ்டங்களால் தவித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மந்திரத்தை 108 முறை கூறும் பொழுது கைகளில் 11 ரூபாயை வைத்துக் கொண்டு கூற வேண்டும். பணக்கஷ்டம் தீர்ந்த பிறகு இந்த 11 ரூபாயை திருவண்ணாமலைக்கு வந்து காணிக்கையாக செலுத்துகிறேன் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்த விட வேண்டும்.
“ஓம் நமசிவாய நம நம சிவாய சிவ சிவ ஓம்”
இதையும் படிக்கலாமே:தடைகளை நீக்கும் தை ஞாயிறு வாராகி வழிபாடு
சிவபெருமானை முழுமனதோடு நம்பி பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு பலவிதமான தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாக்கும். அதோடு இந்த மந்திர வழிபாட்டையும் தீப வழிபாட்டையும் செய்பவர்களுக்கு அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.