
ரொம்பவே சுலபமாக வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சட்டுனு எல்லா வகையான டிபன்களுக்கும் பொருத்தமான ஒரு சுவையான குருமா இந்த முறையில் செய்து கொடுத்தால் அசத்தலாக இருக்கும். காய்கறிகள் எதுவும் சேர்க்காத இந்த வெங்காய ப்ளைன் குருமா இதே அளவுகளில் நீங்களும் செஞ்சு பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடித்து போய்விடும். கெட்டியான பிளைன் குருமா ரெசிபி எப்படி ருசியாக செய்யலாம்? என்பதை தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
டிபன் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க: சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – ஐந்து பல், இஞ்சி – ரெண்டு துண்டு, பெரிய வெங்காயம் – இரண்டு, பச்சை மிளகாய் – ஐந்து, சோம்பு – ஒரு ஸ்பூன், கசகசா – ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு – எட்டு, துருவிய தேங்காய் – அரை கப். தாளிக்க: சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், கிராம்பு – மூன்று, பட்டை – இரண்டு துண்டு, பிரிஞ்சி இலை – ஒன்று, ஏலக்காய் – ஒன்று, அண்ணாச்சி பூ – இரண்டு, கல்பாசி – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 3, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மல்லித்தூள் – ஒரு ஸ்பூன், நறுக்கிய மல்லித் தழை – சிறிதளவு.
டிபன் குருமா செய்ய செய்முறை விளக்கம்:
முதலில் வறுத்து அரைப்பதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு போட்டு லேசாக வதக்கிய பின்பு, இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கி வரும் பொழுது பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப காம்பு நீக்கி சேர்த்து வதக்குங்கள்.
இவை சுருள வதங்கி வரும் பொழுது சோம்பு, கசகசா, முந்திரி பருப்பு ஆகியவற்றை மேற்கூறிய அளவின் படி சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை லேசாக வதக்கிய பின்பு நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். ரெண்டு நிமிடம் நன்கு பிரட்டிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும். குறிப்பாக குருமாவிற்கு மணத்தை கூட்ட கல்பாசியை தவிர்க்காமல் போட்டு விடுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை உடன், ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கி வரும் பொழுது பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு மசிய வதங்க கொஞ்சம் போல உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்தால் தக்காளி வெங்காயம் நன்கு மசிந்து வரும்.
இதையும் படிக்கலாமே:
வீட்டில் கோதுமை மாவு இருக்கா? அப்ப யோசிக்காமல் இந்த ஸ்வீட் அப்பத்தை செஞ்சிடுங்க. வெறும் 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் தயார்.
பின் மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள கலவையையும் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இதில் பச்சை மிளகாய் தவிர வேறு எந்த வகையிலும் காரம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மூடி போட்டு மூன்று நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கெட்டியானதும், நறுக்கிய மல்லித்தழை தூவி தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து பரிமாற வேண்டியது தான். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த எளிமையான குருமா வெரைட்டி ரைஸுக்கும் சூப்பராக இருக்கும்.